ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானம் சிபார்சுகளை ஒருங்கிணைக்க விசேட குழு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தில் முன்மொழியப்பட்டுள்ள சிபார்சுகளை ஒருங்கிணைப்பதற்காக அமைச்சரவைக் குழுவொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சரவை இணைப்பேச்சாளரான கயந்த கருணாதிலக்க மேற்படி தகவலை வெளியிட்டார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலுள்ள விடயங்களை அமுல்படுத்துவதற்கு இலங்கைக்கு 18 மாதங்கள் காலஅவகாசம் வழங்கும் வகையில் 2017 இல் இலங்கை அரசின் இணைஅனுசரணையுடன் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது.

இதற்காக ஐ.நா. மனித உரிமைப் பேரவை மற்றும் ஏனைய அங்கத்துவ நாடுகளிடம் தொடர்ந்தும் தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் ஏனைய ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்கும் இதற்காக செயற்படும்போது பல்வேறு அமைச்சுகள் மற்றும் நிறுவனங்ளை இணைத்தும் பின்னர் மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காக நடைமுறையொன்றை வகுக்கும் நோக்கிலேயே பிரதமர் தலைமையிலும் சம்பந்தப்பட்ட ஏனைய அமைச்சர்களின் ஒத்துழைப்புடனும் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.

இந்தக் குழுவுக்கு ஒத்துழைப்பை வழங்குவதற்காகவும் அதிகாரிகளைக்கொண்ட குழுவொன்றை நியமிப்பற்கான ஆலோசனையை முன்னிலைப்படுத்தி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]