ஐ நாவின் ஊடக அறிக்கை பப்லோ டி கிரீ இலங்கை வருகை

ஐ நாவின்  ஊடக  அறிக்கைஉண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள்நிகழாமைக்கான உத்தரவாதங்கள் என்பவற்றை மேம்படுத்துவதற்கான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர் திரு. பப்லோ டி கிறிப் 2017 அக்டோபர் மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரையில் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். 25 வருடங்களுக்கு மேல் நாட்டில் இடம்பெற்று வந்த மோதலின் விளைவாக இடம்பெற்றிருந்த உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் என்பவற்றையும் உள்ளடக்கிய விதத்தில் கடந்த காலத்தில்; இடம்பெற்றிருக்கும் பாரியளவிலான உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள் என்பவற்றை நிவர்த்தி செய்து வைப்பதில் இலங்கை சாதித்துக்கொண்டிருக்கும் முன்னேற்றத்தைப் பரிசீலனை செய்வதற்கென அவர் இந்த விஜயத்தை மேற்கொள்கிறார்.

அனைத்துமடங்கிய நிலைமாறு கால நீதி உத்தியொன்றை வடிவமைத்து, அமுல் செய்வதாக இலங்கை அரசாங்கம் 2015 ஆம் ஆண்டில் ஒரு கடப்பாட்டினை ஏற்றுக்கொண்டிருந்தது.

“இவ்விடயம் தொடர்பாக இலங்கையில் இதுவரையில் இடம்பெற்று வந்திருக்கும் முன்னேற்றத்தை மீளாய்வு செய்தல், நிலைமாறு கால நீதி மற்றும் சீர்திருத்தச் செயன்முறை என்பவற்றுக்கு செயல்வடிவம் கொடுக்கும் விடயத்தில் நாடு எதிர்கொண்டுவரும் இடையூறுகள் மற்றும் குறுக்கீடுகள் என்பவற்றை இணங்கண்டு கொள்வதும், இத்தகைய இடையூறுகளை வெற்றி கொள்வதற்கான வாய்ப்புக்கள் குறித்து இலங்கை அரசாங்கத்துடனும், இலங்கைச் சமூகத்துடனும் கலந்துரையாடலை நடத்துவதுமே எனது பயணத்தின் நோக்கமாகும்” என்கிறார் திரு. டி கிறிப்.

ஐ நா மனித உரிமைகள் நிபுணர் மத்திய அரசாங்க மட்டத்திலும், மாகாண சபை மட்டத்திலும் அரசாங்க அதிகாரிகளைச் சந்திப்பதுடன், பாராளுமன்ற உறுப்பினர்கள், நீதித்துறை உறுப்பினர்கள், பாதுகாப்புப் படையினர், சட்ட அமுலாக்கல் அதிகாரிகள், சமயத் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார். மேலும், அவர் மனித உரிமைகள் ஆணைக்குழு, சிவில் சமூகம் ஆகியவற்றுடனும், பாதிக்கப்பட்டவர்களின் குழுக்கள், கல்விமான்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகள் ஆகியோருடனும் சந்திப்புக்களை நடத்துவார்.

அவர் கொழும்பிற்கும், அதேபோல நாட்டின் தெற்கு, மத்தி, வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய பிரதேசங்களுக்கும் விஜயங்களை மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கைக்கான இந்த உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பான இறுதி அறிக்கை 2018 செப்ரம்பர் மாதத்தில் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும்.

  • குறிகள்
  • un