ஐ.தே.கவில் இணைவு!!! கெஹலிய மறுப்பு

தான் மீண்டும் ஐதேகவில் இணைந்து கொள்ளவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தவறானது என, நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலத்தில் இவ்வாறான வதந்திகள் பரவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, அவர் இதனைக் கூறினார்.

தான் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியின் இணையப்போவதில்லை என்றும் அவ்வாறு வெளியாகியுள்ள தகவல் பொய்யானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் வரலாற்றை இந்த அரசாங்கம் அழிக்க முயல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரான கெஹலிய ரம்புக்வெல, எதிர்வரும் 12ஆம் திகதி கண்டியில் ஆரம்பிக்கவுள்ள ஐதேகவின் உள்ளூராட்சித் தேர்தல் பிரசார கூட்டத்தில் வைத்து மீண்டும் ஐதேகவில் இணைந்து கொள்வார் என்று நேற்று தகவல் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.

2001-2004 காலப்பகுதியில் ஐதேக அரசாங்கத்தில் அமைச்சராகப் பதவி வகித்த கெஹலிய ரம்புக்வெல, பின்னர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் அமைச்சு பதவியைப் பெற்றார்.

அவர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில், அரசாங்கப் பேச்சாளராகவும் பதவி வகித்திருந்தார்.