ஐ.தே.கவின் உயர்மட்ட கூட்டம் நாளை பதவிகளின் அதிரடி மாற்றங்களுக்கு கடிவாளம்

ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்ட குழு நாளை கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் கூடுகிறது. ஐ.தே.கவின் பதவிகளில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தும் முகமாக மேற்படி கட்சியின் கூட்டம் கூடுகிறது என்று கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிந்தது.

தேசிய அரசின் பிரதான பங்காளியான ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஆறுவருடங்களுக்கு பிறகு அதிரடி மாற்றங்கள் இடம்பெறவுள்ளன.

கட்சியின் முக்கியப் பொறுப்புகளை இரண்டாம்நிலை தலைமைத்துவத்திடம் கையளிக்கும் நோக்கிலேயே இந்த மாற்றம் நிகழவுள்ளது என்றும், எதிர்வரும் 5 ஆம் திகதி கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறும் மத்திய செயற்குழு கூட்டத்தின்போது இதற்கான ஒப்புதல் பெறப்படும் என்றும் அறிய முடிகிறது.

இதன்படி தற்போது ஒன்றாக இருக்கும் பிரதித் தலைவர்கள் பதவி மூன்றாக அதிகரிக்கப்படவுள்ளன. சிறுபான்மையினத்தவர் ஒருவரும் பிரதித் தலைவராக நியமனம்பெறும் வகையில் ஒதுக்கீடு இடம்பெறவுள்ளது.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவராக இருக்கும் ரவி கருணாநாயக்க அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு, பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்படவுள்ளார். அமைச்சர் ரவிக்கு பிரதித் தலைவர் பதவி கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கும் உபதலைவர் பதவி கையளிக்கப்படவுள்ளது.

ஐ.தே.கவின் உயர்மட்ட

தனது ஜனநாயகக் கட்சியை கலைத்துவிட்டு, அங்கத்தவர்கள் சகிதம் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா அண்மையில் பெற்றுக்கொண்டார்.

அதேவேளை, உள்ளூராட்சி, மாகாணசபைத் தேர்தல் தேர்தல் திகதி அறிவிக்கப்படும்வரை பொதுச்செயலாளர் பதவியில் மாற்றம் இடம்பெறாது. திகதிகள் அறிவிக்கப்பட்ட பின்னர் கபீர் ஹாசீமுக்கு பிரதித் தலைவர் பதவி வழங்கப்பட்டு , பொதுச்செயலாளராக அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தை நியமிப்பதே கட்சியின் திட்டமாக இருக்கின்றது. எனவே, செயற்குழு கூட்டத்தின்போது பிரதிப் பொதுச்செயலாளராக அகில விராஜ் மீண்டும் தெரிவுசெய்யப்படுவார்.

இளைஞர் அணி, மகளிர் பிரிவு ஆகியவற்றின் தலைவர் பதவிகளில் மாற்றம் இடம்பெறாது. ஐக்கிய தேசியக் கட்சியை இளைஞர்களிடம் கையளிக்கும் புரட்சிப் பயணத்தின் ஒரு அங்கமாகவே இந்த மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாகவும் கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]