ஐ.எஸ். அமைப்புக்கு உதவும் சிலர் நாடாளுமன்றில் : பொதுபல சேனா பகிரங்க குற்றச்சாட்டு

ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்புக்கு உதவும் சிலர் அமைச்சரவைக்குள்ளும், நாடாளுமன்றத்திலும் உள்ளனர் என்று பொதுபல சேனா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
அத்துடன், ஐ.எஸ். அமைப்பால் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள வரைப்படத்தில் இலங்கையும் உள்ளடங்கியுள்ள சூழலில் இலங்கையில் ஐ.எஸ். தீவிரவாத் தாக்குதலுக்கு சாத்தியக்கூறுகள் இல்லை என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் பொதுபல சேனா தெரிவித்துள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவ்வமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான டிலாந்த வித்தானகேமேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் வலியுறுத்தியதாவது,
நாட்டில் முஸ்லிம் அடிப்படைவாதம் குறித்து கடந்த 5 வருடங்களாக நாங்கள் எச்சரிக்கை விடுத்துவருகிறோம். ஆனால், முன்னாள் மஹிந்த அரசோ அல்லது தற்போதைய மைத்திரிரணில் அரசோ அதனைக் கண்டு கொள்வதில்லை.
இலங்கைக்கு ஐ.எஸ்.பயங்கரவாதத் தாக்குதல் எச்சரிக்கை உள்ளது என்று சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சமூகப் பொறுப்புள்ள ஊடகமொன்று தவறான கருத்துக்களை ஒருபோதும் வெளியிடாது.
அளுத்கம கலவரம் கூட பொதுபல சேனாவினதும் ஞானசார தேரரினதும் தூண்டுதலிலும் இடம்பெற்றது என்றே கதை பரப்பிவிடப்பட்டுள்ளது.
பிடியாணை
ஆனால், அப்பகுதியில் காத்தான்குடி, ஏறாவூர் ஆகிய பகுதிகளிலிருந்து பஸ்களின் மூலம் முஸ்லிம் அடிப்படைவாதிகள் தேரர்களை தாக்குதற்காகவே கொண்டுவரப்பட்டிருந்தமை தொடர்பிலெல்லாம் யாரும் கதைப்பதில்லை. வெளிநாடுகளிலிருந்துகூட இதுதொடர்பில் எமக்கு பலமுறை சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே தற்போது சர்வதேசத்தையே அச்சுறுத்திவரும் ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பினரால் வெளியிடப்பட்டுள்ள வரைப்படத்தில் இலங்கையும் காணப்படுகின்றது. பிரதமர் ரணில் விக்கிரமங்க இந்தியாவிலும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நாடாளுமன்றிலும் வைத்து அவ்வமைப்புடன் தொடர்புடைய 30 பேர் இலங்கையில் இருக்கிறார்கள் என்றே தெரிவித்திருந்தனர். ஆனால், அதனையும் விட அதிகமானோர் இலங்கையில் இருக்கிறார்கள் என்பது தான் எமது கருத்தாக இருக்கின்றது.
எந்தவொரு தகவலும் கிடைக்கப்பெறாது சமூகப்பொறுப்புள்ள ஒரு ஊடகம் வீணாக ஐ.எஸ். குறித்த செய்தியை வெளியிடாது. இப்படியிருந்தும் இதனை அமெரிக்கத் தூதரகம் மறுத்துள்ளமையும் சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றது. ஏனெனில், அமெரிக்காவின் சி.ஐ.ஏ. உள்ளிட்ட மிகவும் சக்திவாய்ந்த புலனாய்வுப் பிரிவுகள் இருக்கின்றபோதே அவர்களால் உலக வர்த்தக மையம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டமையை தெரிந்துக்கொள்ள முடியாது போய்விட்டது. அதேநிலைமை இலங்கையிலும் ஏற்படலாம் தானே.
ஐ.எஸ் தீவிரவாதிகள்
ஐ.எஸ்.பயங்கரவாத்துக்கு துணைபோகும் மற்றும் உதவும் சிலர் அமைச்சரவையிரும் பாராளுமன்றிலும் இருக்கிறார்கள். இவ்வாறு இருக்கும்போது அமெரிக்கா கூறுவதை எப்படி எம்மால் நம்ப முடியும்?
ஐ.எஸ்.பயங்கரவாதம் என்பது விடுதலைப் புலிகளையும்விட அதி அபாயகரமானது. இதற்கு முகம்கொடுக்க இலங்கைக்கு சக்தி இல்லாதமையால் அமெரிக்கா, ரஸ்யா, இந்தியா போன்ற நாடுகளுடன் பாதுகாப்பு தொடர்பிலான ஒப்பந்தங்களையும் அரசு செய்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]