ஐரோப்பிய வீட்டுத்திட்டம் தொடர்பில் மட்டு. மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள்குடியேற்றப் பகுதிகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள வீட்டுத்திட்டம் குறித்த விசேட கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் ஏ.சுதாகர், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திருமதி கௌரி தினேஸ், போரதீவு பற்று என்.வில்வரெட்ணம், உதவித்திட்டமிடல் பணிப்பார்கள் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இத்திட்டத்தின் கீழ் முழுமையாக 580 வீடுகளும், திருத்தங்களுக்குள் 35 வீடுகளும் உள்வாங்கப்படுகின்றன. வீட்டுத்திட்டம் குறித்த விளக்கங்களை இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துகின்ற நிறுவனங்களான ஹபிராட் இன்ரர்நசனலின் சிரேஸ்ட திட்ட முகாமையாளர் ஜே.மாறன், வேல்ட்விசன் நிறுவனத்தின் வலய முகாமையாளரும் இவ் வீட்டுத்திட்டத்தின் திட்ட முகாமையாளருமான ஏ.அலெக்ஸ் ஆகியோர் முன்வைத்தனர்.

இக் கலந்துரையாடலில் பயனாளிகளைத் தெரிவு செய்தல், வீட்டுத்திட்டங்களை அமைத்தல், காணிப்பயன்பாடுகள், வாழ்வாதார மேம்பாட்டுத்திட்டங்களை மேற்கொள்ளல், நிதித்திட்டமிடல் உள்ளிட்ட பல்வேறு விடங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்டுவரும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் பற்றியும், மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கித்துள், கரடியனாறு, விளாவெட்டுவான், கரவெட்டி, கொக்கட்டிசோலை, முனைக்காடு, நவகிரிநகர், சின்னவததை, ஆகிய கிராமங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியில் ஹபிராட் இன்ரர்நசனல், கபிராட் சிறிலங்கா, வேல்ட்விசன் ஆகிய நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இந்த வீட்டுத்திட்டத்தில் ஒரு தொகுதி வீடுகள் சாதாரணமான கட்டுமான முறைகளிலும், மற்றைய தொகுதி வீடுகள் சூழலுக்கு நட்பு ரீதியானதான முறைகளிலும் அமைக்கப்படவுள்ளன. மேலும், இந்திய அரசின் உதவியுடன் 270 வீடுகள் அமைப்பது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]