ஏழு நாட்களுக்குள் அரசியல் தீர்வு- ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு…

நாடாளுமன்றத்தில் இருக்கின்ற 225 பேரும் கையொப்பமிட்டு கொடுத்தாலும் ரணில் விக்ரமசிங்கவை ஒருபோதும் மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். அவர் நாட்டுக்கு பொருத்தமில்லாத அரசியல்வாதி என்றும், அவருடைய நோக்கம் நாட்டுக்கு பொருத்தமானதல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அத்துடன் இன்னும் ஒரு வாரத்திற்குள் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் தொடர்ந்தும் அவர் உரையாற்றும் போது, எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் நாட்டில் இப்போதுள்ள அரசியல் நெருக்கடி நிலை முழுமையாக தீர்க்கப்படும் என்று தான் உறுதியளிப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

மேலும், பிரச்சினையையும் நெருக்கடியையும் தோற்றுவித்தது தான் அல்ல என்றும் ரணில் விக்ரமசிங்கவே என்றும் அவர் மேலும் கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

2014ம் ஆண்டு நவம்பர் 21 ம் திகதி தான் எடுத்த தீர்மானமும், கடந்த ஒக்டோபர் 26ம் திகதி எடுத்த தீர்மானமும் சரியானதே என்றும் கூறினார். அந்த இரண்டு தீர்மானங்களும் நாட்டுக்காக எடுத்தமையினால் சரியானதே. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09ம் திகதி பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க 62 இலட்சம் மக்கள் வழங்கிய ஆணையை துஷ்பிரயோகம் செய்தார்.

கடந்த 2014ம் ஆண்டு ராஜபக்ஷ ஆட்சியில் இருந்து வௌியேறுவதற்காக பொறுமை காத்ததை விடவும், கடந்த மூன்றரை வருடங்களாக தான் பொறுமை காத்ததாகவும் ஜனாதிபதி கூறினார். ரணில் விக்ரமசிங்க நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல் நோக்கத்தை நாசமாக்கியதோடு, நாட்டையும் நாசமாக்கினார். நாட்டின் முக்கிய கட்சியான ஐக்கிய தேசிய கட்சியையும் நாசமாக்கினார். அத்துடன் ஓரளவு என்னையும் நாசமாக்கிவிட்டார்.

இவை அனைத்திற்கும் வழங்குவதற்கு என்னிடம் இருந்த ஒரே தீர்வு ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் கதிரையில்

இருந்து துரத்துவதே என்று ஜனாதிபதி கூறினார். நாட்டை பிரிக்காமல், காட்டிக் கொடுக்காமல், சமஷ்டி வழங்காமல் வடக்கு மக்களுக்கு வழங்க முடியுமான தீர்வுகளை அவர் வேண்டுமென்றே வழங்கவில்லை. ஆகவே நான் எடுத்த இந்த தீர்மானம் இன்று மட்டுமல்ல எதிர்காலத்திலும் சரியானதாகவே இருக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]