உணவு ஒவ்வாமை காரணமாக ஐம்பத்து மூன்று பேர் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு ஏறாவூரில் திருமண வீட்டில் விருந்து உட்கொண்ட ஐம்பத்து மூன்று பேர் உணவு ஒவ்வாமை காரணமாக சுகவீனமடைந்து ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் (26.11.2017) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் அதிகமானவர்கள் குழந்தைகள் , சிறுவர்கள் மற்றும் பெண்களாவர்.

இவர்களுக்கு தொடரச்சியான வயிற்றுவலி, வாந்தி தலைசுற்று, வயிற்றுக்போக்கு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏறாவூர் பள்ளியடி வீதியிலுள்ள வீடொன்றில் வழங்கப்பட்ட கோழிஇறைச்சி பிரியாணியை உட்கொண்டதையடுத்து வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதன்பின்னர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சமையல்காரரது வீட்டிலேயே இவ்வுணவு சமைக்கப்பட்டதாக திருமண வீட்டார் தெரிவிக்கின்றனர்.

இவர்களுக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாக வைத்திய அத்தியட்சகர் எஸ்ஏசிஎம். பழீல் தெரிவித்தார்.

இதேவேளை பிரதேச சிரேஸ்ட பொதுச்சுகாதார அதிகாரி எம். புலேந்திரகுமார் உணவு சமைத்த வீட்டிற்கு சென்றபோதிலும் உணவுமாதிரிகள் எதனையும் எடுக்கமுடியவில்லை. இதையடுத்து சுகவீனமடைந்தவர்களது வாந்தி மற்றும் மலம் ஒருதொகுதியையும் உணவு தயாரிப்பிற்குப் பயன்படுத்திய மூலப்பொருட்களையும் எடுத்து பரிசோதனைக்குட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.