ஏறாவூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது – எம்.எல். அப்துல் லத்தீப்

எம்.எல். அப்துல் லத்தீப்

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திலிருந்து தமக்குச் செலுத்தப்பட வேண்டிய 32 இலட்ச ரூபாய் எரிபொருள் கட்டணம் செலுத்தப்படாததால் ஏறாவூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக அக்கூட்டுறவுச் சங்கத்தின் பொது முகாமையாளர் எம்.எல். அப்துல் லத்தீப் தெரிவித்தார்.

இது தொடர்பாக வியாழக்கிழமை 04.01.2018 கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, ஏறாவூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினால் நிருவகிக்கப்படும் எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத்தினால் பயன்படுத்தப்படும் சுமார் 50 இற்கு மேற்பட்ட வாகனங்களுக்கு எரிபொருட்கள் பெறப்படுகின்றன.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கு பிரதேசமான கதிரவெளி, வாகரை, வாழைச்சேனை, மாஞ்சோலை, சந்திவெளி, மாவடிவெம்பு, செங்கலடி, கரடியனாறு, ஏறாவூர் ஆகிய வைத்தியசாலைகளின் நோயாளர் காவு வண்டிகள், சுகாதார வைத்திய அதிகாரிகளின் வாகனங்கள் உட்பட மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் பாவனையிலுள்ள சுமார் 50 இற்கு மேற்பட்ட வாகனங்களுக்கு ஏறாவூர் நகர எரிபொருள் நிரப்பு நிலையத்திலேயே எரிபொருள் வழங்கப்படுகின்றது.

எனினும், உடன் பணமின்றியும், முற்பணமின்றியும் பிற்கொடுப்பனவாகவே இவ்வாறு எரிபொருள் விநியோகம் இடம்பெறுகின்றது.

ஆயினும், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தினால் ஏறாவூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு இவ்விதம் பிற்கொடுப்பனவாகச் செலுத்தப்பட வேண்டிய சுமார் 32 இலட்ச ரூபாய் பணம் நீண்ட காலமாக நிலுவையிலுள்ளது.

இதனால் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் சமீப சில காலமாக நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.

இதன் காரணமாக மேற்படி கூட்டுறவுச் சங்க ஊழியர்களுக்கு மாதாந்தச் சம்பளம் வழங்குவதிலும் நெருக்கடி தோன்றியுள்ளது.

நிலுவையாக உள்ள பணம் எப்போது மீளளிக்கப்படும் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக அதிகாரிகள் உறுதியான கால எல்லையை தர மறுக்கின்றனர்.

இதனால், எரிபொருள் விநியோகத்தை மேற்கொண்டு தொடர முடியாத துரதிருஷ்ட நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.

எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டால் பிரதேசத்திலுள்ள சுமார் 10 இற்கு மேற்பட்ட வைத்தியசாலையகளின் நோயாளர் காவு வண்டிச் சேவையும் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படலாம் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]