ஏறாவூர் தாய் மகள் இரட்டைப் படுகொலை கைதிக்கு கத்திக்குத்து

ஏறாவூர் தாய் மகள் இரட்டைப் படுகொலை சந்தேக நபரான கைதிக்கு கத்திக்குத்து பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் சம்பவம்

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஏறாவூர் முகாந்திரம் வீதியில் இடம்பெற்ற தாய், மகள் இரட்டைப் படுகொலைச் சந்தேக நபர்களில் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 25.03.2018 கத்திக்குத்துக்கு இலக்கானதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர், அப்துல் மஜீத் மாவத்தை ஐயங்கேணியைச் சேர்ந்த வசம்பு என்றழைக்கப்படும் உஸனார் முஹம்மது தில்ஷாத் (வயது 29) என்பவரே முதுகுப்புறத்தில் மூன்று தடவைகள் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏறாவூரில் வைத்தே கத்திக்குத்து இடம்பெற்றுள்ளதாகவும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் கத்திக்குத்தை மேற்கொண்டு விட்டுத் தலைமறைவானதாகவும் கூறப்படுகின்றது.

ஏறாவூர் நகர பிரதேசத்தில் முகாந்திரம் வீதி முதலாவது குறுக்கு ஒழுங்கையிலுள்ள வீட்டில் வசித்துவந்த தாயான நூர்முஹம்மது உஸைரா (வயது 56) அவரது திருமணமாகிய மகளான ஜெனீராபானு மாஹிர் (வயது 32) ஆகியோர் கடந்த வருடம் (2016) செப்ரெம்பெர் 11ஆம் திகதி அவர்களது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களும் கடந்த 2016ஆம் வருடம் செப்ரெம்பெர் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக ஒருவருடம் நீடிக்கப்பட்டு வந்த விளக்கமறியல் உத்தரவில் இருந்து வந்த நிலையில் அவர்களில் இருவர் கடந்த வருடம் செப்ரெம்பெர் மாதத்திலும் மற்றைய இருவரும் கடந்த வருடம் ஒக்ரோபெர் மாதத்திலும் மேலும் ஒருவர் கடந்த வருடம் டிசெம்பெர் 06ஆம் திகதியும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது கத்திக்குத்துக்கு இலக்கானவர் இவ்வருடம் 2018 பெப்ரவரி மாதம் பிணையில் வெளியே வந்திருந்தார்.

ஏறாவூர் காட்டுப்பள்ளி வீதியைச் சேர்ந்த அபூபக்கர் முஹம்மது பிலால் (வயது 50), ஏறாவூர் ஆதார வைத்தியசாலை பின் ஒழுங்கையைச் சேர்ந்த இஸ்மாயில் முஹம்மது பாஹிர் (வயது 25), ஏறாவூர் நகர் போக்கர் வீதியைச் சேர்ந்த இஸ்மாயில் சப்ரின் (வயது 30), பாடசாலை வீதி மீராகேணியைச் சேர்ந்த கலீலுர் ரஹ்மான் அஹம்மது றாசிம் (வயது 23) பள்ளியடி வீதி, காவத்தமுனை, ஓட்டமாவடியைச் சேர்ந்த புஹாரி முஹம்மது அஸ்ஹர் (வயது 23), ஏறாவூர், அப்துல் மஜீத் மாவத்தை ஐயங்கேணியைச் சேர்ந்த வசம்பு என்றழைக்கப்படும் உஸனார் முஹம்மது தில்ஷாத் (வயது 29) ஆகியோரே இரட்டைப் படுகொலையில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களாவர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]