ஏம்மை நாமே பாதுகாத்துக்கொள்வதற்கு இரவு ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுமாறு சுமந்திரன் வலியுறுத்தல்

ஏம்மை நாமே பாதுகாத்துக்கொள்வதற்கு உடனடியாக கிராம மட்ட விழிப்புக்குழுக்களை அமைத்தும், இரவு ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுமாறும், இளைஞர்களிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று 02 நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த ஓரிரு தினங்களாக வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்த நிலையில், அந்த வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் எமக்கு உள்ளது. எங்களை நாங்களே பாதுகாக்க வேண்டுமென்ற நிலமை தற்போது எழுந்துள்ளது. அதேநேரம் பொலிஸாரும் தமது கடமையினை சரியாக செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் உண்மையானது.

வன்முறைச் சம்பவங்களைச் செய்பவர்கள் எமது சமூகத்தினைச் சேர்ந்தவர்கள். ஆகையினாலே, ஒரு சமூகப்புரள்வு ஏற்படுகின்ற போது, அதனைத் குறித்த கரிசனை மற்றும் அவற்றினை மாற்றி அமைக்க வேண்டிய பொறுப்பு எமது கையிலேயே இருக்கின்றது.

இந்த சமூகப்புரள்வுகளைக் கட்டுப்படுத்த விழிப்புக்குழுக்களை அமைக்க வேண்டுமென்று வலியுறுத்தியிருந்தோம். ஓவ்வொரு கிராமத்திலும் உள்ள இளைஞர்கள் வழிப்புக்குழுக்களை அமைக்க வேண்டியதுடன், இரவு வேளைகளில் ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டிய கட்டாய நிலமையும் ஏற்பட்டுள்ளது.

உள்ளுராட்சி சபைத் தேர்தலின் பின்னர் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் எந்த கட்சியைச் தேர்ந்தவர் என்பது முக்கியமல்ல. அந்த வட்டாரத்தினைச் சேர்ந்த ஒவ்வொரு பிரதிநிதியும், தமது வட்டாரங்களில் ஒரு விழிப்புக்குழுக்களை அமைப்பதற்கான பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

தேவையான அனுசரணைகள் வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். உள்ளுராட்சி உறுப்பினர், தமது வட்டாரத்தில் எத்தனை கிராமங்கள் உள்ளனவோ, அத்தனை கிராமத்திலும் இந்த வார முடிவுக்குள் விழிப்புக்குழுக்களை அமைப்பதற்கான பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அத்துடன், அந்த விழிப்புக்குழுக்களை அவசரமாக அமைக்குமாறும் வலியுறுத்தியுள்ளதுடன், அந்தந்த பிரதேச இளைஞர்கள், விளையாட்டுக்குழு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும், வட்டார பிரதிநிதிகளுடன் இணைந்து, உடனடியாக விழிப்புக்குழுக்களை அமைக்க வேண்டும்.

வன்முறை மற்றும் சமூகப் புரள்வுகளை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதால், வன்முறைக் கலாசாரத்தினை இல்லாதொழிப்பதற்கு நீண்ட காலத் திட்டத்தினையும் உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் வன்முறைக் கலாசாரத்தினைப் புகழும் தன்மையினைத் தவிர்க்க வேண்டும். வன்முறைக் கலாசாரத்தினைப் புகழும் நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அதற்கு அரசியல்வாதிகளும் விதிவிலக்கானவர்கள் அல்ல. அதன் பின்னர், இளைஞர்களை குறை கூறிப் பிரியோசனம் இல்லை.

வன்முறைகளினால் எவற்றினையும் சாதிக்க முடியாது. வன்முறைகள் முற்றாக புறக்கணிக்கப்பட வேண்டும். வன்முறைகளைப் புகழும் கலாசாரத்தினை இனிமேல் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள்வித்துள்ளார். அதேநேரம், கிராம மட்ட விழிப்புக்குழுக்களை அமைத்து உடனடியாக செயற்படுத்துவதற்கு, பொலிஸாரின் அனுசரணைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும், பொலிஸாரின் ஒத்துழைப்பினைப் பெற தாம் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.