ஏமாற்று அரசியல் செய்து வயிறு வளர்ப்பவர்களிடம் எதற்கு அரசியல் அதிகாரம்? – நஸீர் அஹமட்

நஸீர் அஹமட்

ஏமாற்று அரசியல் செய்து வயிறு வளர்ப்பவர்களிடம் எதற்கு அரசியல் அதிகாரம்? ஸ்ரீலமுகா பிரதித் தலைவர் நஸீர் அஹமட் கேள்வி

ஒட்டு மொத்தமான சமூகத்தையும் ஏமாற்றி வயிறு வளர்க்கும் அரசியல்வாதிகளுக்கு எதற்காக அரசியல் அதிகாரம் தேவை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் கேள்வி எழுப்பினார்.

ஏறாவூர் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு 23.01.2018 இடம்பெற்ற ஏறாவூர் நகரசபையைக் கைப்பற்றும் வியூகத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாகப் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அவர் உரையாற்றினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

காலாகாலமாக மக்களை ஏமாற்றி வந்ததோடு ஊருக்குள் வெள்ளம் வந்தால் மாத்திரம் நகர சபையினரோடு வந்து தண்ணீரை வழிந்தோட விடுவதாகக் கூறி அரசியல் காட்சி நடாத்தும் சில அரசியல்வாதிகளுக்கு இன்னும் இன்னும் அரசியல் அதிகாரத்தை ஏன் வழங்க வேண்டும்,

நகரக் கழிவுகளைச் சேகரித்து ஊருக்குள் குப்பை கொட்டும் கையாலாகத்தனத்தை இந்த அரசியல்வாதிகள் கடந்த 30 வருட கால ஆட்சியில் செய்து வந்து கொண்டிருந்தார்கள்.

இதனை நான் கிழக்கு மாகாண முதலமைச்சராக வந்த ஒரு சில குறுகிய காலங்களுக்குள்ளாகவே மாற்றியமைத்தேன்.
திண்மக் கழிவு முகாமைத்துவம், மற்றும் கழிவு நீர் முகாமைத்துவத்திட்டத்திற்காக சுமார் 1350 கோடி ரூபாய் செலவிலமைந்த விஞ்ஞான பூர்வ செயற் திட்டத்தின் ஆய்வு அறிக்கையை பிரதம மந்திரியிடம் கையளித்துள்ளேன். சீன அரசாங்கத்தின் உதவியுடன் இத்திட்டம் அமுலாக்கப்படவுள்ளது.

இத்திட்டம் அமுலாக்கப்பட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தின் தன்னாமுனையிலிருந்து சித்தாண்டி வரையுள்ள பல்லாயிரக்கணக்கான தமிழ் முஸ்லிம் மக்கள் வருடா வருடம் எதிர் நோக்கும் வெள்ள நீர், கழிவு நீர், மற்றும் சாக்கடை நீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிட்டும்.

நஸீர் அஹமட்

அதேபோல மட்டக்களப்பு வாவியையும் அதனைச் சூழவுள்ள சதுப்பு நிலப் பிரதேசங்களையும் இயற்கை மாறாமல் பேணுவதற்காகவும் பல திட்ட முன் மொழிவுகளைச் செய்துள்ளோம்.

இப்பிரதேசத்தின் வளங்களை நாசம் பண்ணாமல் அதன் மூலம் உச்சப் பயனைப் பெற திட்டம் வகுத்துள்ளோம்.

இப்பிரதேசத்தின் மீன் பிடி வளம் எதுவித திட்டமுமில்லாமல் வீணாகிறது.

இதுபோன்று எத்தனையோ தொழில்துறை சார்ந்த மக்களுக்கு நன்மை தரும் எத்தனையோ பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களைத் தீட்டியுள்ளோம். அதன் பலாபலன்கள் சிலவற்றை இப்பொழுது பிரதேச மக்கள் ஆரம்பிக்கத் துவங்கியிருக்கின்றார்கள்.

எதிர்வரும் காலங்களில் இந்தப் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் வெற்றியளிக்கும்போது மக்கள் முன்னேறுவார்கள்.

இதனையெல்லாம் சிந்திக்காமல் இவ்வளவு காலமும் ஆலில்லா ஊருக்கு இலுப்பைப் பூதான் சர்க்கரை என்கின்ற மாதிரி வெறும் காட்சிப் பொருளாக இருந்து கட்சிகள் மாறி மாறி தமது அரசியல் இருப்பைத் தக்க வைத்துக் கொண்ட அரசியல்வாதிகள் இப்பொழுது புதிய அரசியல் வருகையால் தடுமாறிப் போய் நிற்கிறார்கள்.

அபிவிருத்தித் திட்டங்களை மக்களுக்கு முன்மொழியாமல் ஆளாளைப் பற்றி விமர்சிப்பதில் ஈடுபட்டுள்ளார்கள். இத்தகைய ஏமாற்று அரசியல்வாதிகளை விரட்டியடிப்பதற்கு மக்கள் இம்முறை திடசங்கற்பம் பூண வேண்டும்” என்றார்.

நஸீர் அஹமட்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]