எழுத்தாளர் சங்க தலைவர் பதவியிலிருந்து விலகிய கே.பாக்கியராஜ்

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியிலிருந்து கே.பாக்கியராஜ் இராஜினாமா செய்துள்ளார்.

சர்கார் படம் தொடர்பாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

சர்கார் கதை திருடப்பட்டதென எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக பாக்கியராஜ் நீதிமன்றத்திற்கு சென்றிருந்தார். அத்தோடு, வளர்ந்துவரும் கலைஞர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்பதற்காகவே அவர் நீதிமன்றை நாடியதாக குறிப்பிட்டார்.

இந்த விடயத்தில் தான் மிகவும் பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்த பாக்கியராஜ், தற்போது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராக பதவியேற்று 6 மாதங்களே ஆன நிலையில் இவர் இந்த முடிவை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த நடிகர் பாக்கியராஜ்,

“சர்கார் கதையும் செங்கோல் கதையும் ஒன்று என கூறியிருந்ததால் எனக்கு பல சிக்கல்கள் ஏற்பட்டன. நான் ஒருவேளை தேர்தலில் நிற்காமல் தலைவராக தேர்வு செய்யப்பட்டதால் இந்த நிலைமை ஏற்பட்டதா என தெரியவில்லை. அடுத்து தேர்தல் நடைபெற்றால் கண்டிப்பாக போட்டியிடுவேன்.

சர்கார் குறித்து முறைப்பாடு முன்வைக்கப்பட்டபோது உண்மையாகவும் நியாமாகவும் முடிவெடுக்க தீர்மானித்தேன். இதனால் முருகதாஸிடம் கெஞ்சியும் அவர் உடன்படாததால் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படத்தின் கதையை கூறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். இது தவறான செயல், இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்.

எனக்கு நடந்த ஒழுங்கீனங்களையும், சிக்கல்களையும் சங்க நலன் கருதி வெளியிட மாட்டேன்” என ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]