வாழைச்சேனை பிரதேச சபைக்கு முஸ்லிம்கள் ஏழு ஆசனம் பெற்றால் யாரும் தனியான ஆட்சி அமைக்க முடியாது

வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட நான்கு முஸ்லிம் வட்டாரத்தின் மூலம் ஏழு உறுப்பினர்களை நாங்கள் பெறுவோமாக இருந்தால் யாரும் தனியாக ஆட்சி அமைக்க முடியாது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய முன்னனியில்; போட்டியிடும் செம்மண்ணோடை வேட்பாளர் எம்.எச்.எம்.ஹக்கீமினை ஆதரித்து செம்மண்ணோடையில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்-

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்ட நான்கு முஸ்லிம் வட்டாரத்தில் கிட்டத்தட்ட பதினையாயிரம் வாக்குகளுடன் இருக்கின்றார்கள். பிரதேச சபைக்கு 45000 வாக்குகளைக் கொண்டு பிரதான கட்சிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி களமிறங்கியுள்ளது.

இங்கு இந்த மூன்று பிரதான கட்சிகளும் தான் 23 ஆசனங்களை சமமாக பிரித்து எடுக்கின்ற நிலவரம் வரப்போகின்றது. அவ்வாறு பிரித்தெடுக்கின்ற போது தேர்தலில் நான்கு முஸ்லிம் வட்டாரங்களையும் நாங்கள் வெற்றி பெற்றால் மேலதிகமாக மூன்று தேசிய பட்டியல் எடுத்தால் ஏழு உறுப்பினர்களை நாங்கள் பெறுவோமாக இருந்தால் 23 உறுப்பினர்கள் வருகின்ற போது மூன்றில் ஒரு உறுப்பினர்களை ஐக்கிய தேசிய கட்சி வசம் இருக்குமாக இருந்தால் யாரும் தனியாக ஆட்சி அமைக்க முடியாது.

23 ஆசனங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி யானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஏழு ஆசனங்களை கை வசம் வைத்திருந்தால் யாரும் தனியாக ஆட்சி அமைக்க முடியாது. கடந்த காலத்தில் கோறளைப்பற்று சமூகத்திடத்தில் நாங்கள் கேட்டோம்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்களிடத்தில் சொன்னோம் இரு கட்சிகளும் வேறு சின்னத்தில் போட்டியிட்டு வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையை கைப்பற்றி இவர்களுக்கு ஒரு அழுத்தத்தை கொடுத்து பிரதி தவிசாளரை பெற்று ஒரு அழுத்தத்தை கொடுப்பதன் மூலம் உடனடியாக பிரிப்புக்கு வழி கோல முடியும் என்று சொன்ன போதும் அப்படியென்றால் எங்களுக்கு அந்த சபை தேவையில்லை என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் சொன்னார்கள்.

எனவே வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்ட நான்கு முஸ்லிம் வட்டாரத்தில் உள்ள மக்கள் அனைவரும் யானைச் சின்னத்தில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து தாருங்கள் என்று நாங்கள் கேட்கின்றோம் என்றார்.