எமது கலாசாரத்தைப் பாதுகாத்து முன்னேறிச்செல்வதற்கு எமது பிள்ளைகள் தயாராக இருக்கவேண்டும் – ஜனாதிபதி

புதிய தொழில்நுட்பம், வர்த்தகமயமாதல், போட்டித்தன்மை போன்ற அம்சங்கள் பல்வேறு சவால்களை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில் எமது கலாசாரத்தைப் பாதுகாத்து முன்னேறிச்செல்வதற்கு எமது பிள்ளைகள் தயாராக இருக்கவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நாட்டின் அனைத்து பிள்ளைகளுக்கும் இலவசக் கல்வியை உறுதிசெய்து கற்ற பரம்பரையொன்றைக் கொண்ட சமூகத்தைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.

கொழும்பு விசாகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

President

வித்தியாலயத்துக்கு சென்ற ஜனாதிபதியை மாணவிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி விசாகா கல்லூரியின் நூறு வருட சிறந்த பயணத்தைப் பாராட்டினார்.
1917ஆம் ஆண்டு ஜெரமியஸ் டயஸ் அம்மையாரினால் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு விசாகா வித்தியாலயம் இலங்கையில் உள்ள பழைமைவாய்ந்த பௌத்த மகளிர் கல்லூரியாகும்.

கல்லூரியின் நூற்றாண்டை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு நாணயத்தை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி ஜனாதிபதியிடம் கையளித்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, கயந்த கருணாதிலக, கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாரச்சி, கல்லூரியின் அதிபர் சந்தமாலி அவிருப்பொல, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.