எமக்காக இனிமேல் சர்வதேசத்தின் கதவுகளும் திறக்கப்போவதில்லை – அனந்தி சசிதரன்

யாழ்ப்பாணம்; எமக்காக இனிமேல் சர்வதேசத்தின் கதவுகளும் திறக்கப்போவதில்லை என்பதையே ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளரின் நிலைப்பாடு உணர்த்தியுள்ளதாக வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, அனைத்துலக நாடுகளின் உதவியுடன் சிறீலங்கா அரசு மேற்கொண்ட தமிழின அழிப்பு நடவடிக்கைக்கு நீதி கேட்டு நாம் முன்னெடுத்துவரும் போராட்டத்தில், எமக்காக இனிமேல் சர்வதேசத்தின் கதவுகளும் திறக்கப்போவதில்லை என்பதையே ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளரின் நிலைப்பாடு உணர்த்தியுள்ளது.

மனித உரிமைகளுக்காக குரல்கொடுப்பதற்கு சர்வதேச அளவில் மிக மோசமான சூழல் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் அவர்கள், முதலாவது பதவிக் காலத்துடனேயே பணியில் இருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளமை பெரும் அதிர்சியினையும் ஏமாற்றத்தினையும் தந்துள்ளது.

“எதிர்வரும் 2018 ஆம் ஆண்டே வெளியுறவுக் கொள்கை மூலம் நான் பெற்ற ஆணையின் இறுதிக் காலமாகும். இரண்டாவது முறையாகவும் மீண்டும் ஆணையாளர் பதவியை பொறுப்பேற்கப் போவதில்லை.” என்பதனை மனித உரிமைகள் ஆணையாளரினால் அவரது பணியாளர்களுக்கு 20.12.2017 அன்று அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல் அறிக்கையின் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆகிய உலக மா மன்றங்களின் மீதான நம்பிக்கையை தகர்த்தெறிந்துள்ளது ஆணையாளரின் இந்நிலைப்பாடு. இவை வல்லாதிக்க நாடுகளின் தலையீட்டினால் சுதந்திரமாக செயற்பட முடியாமல் இருப்பதன் வெளிப்பாடாகவே ஆணையாளரின் இவ்வறிவிப்பு அமைந்துள்ளது.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையையோ, சர்வதேசத்தையோ இனிமேலும் நாம் நம்பிக்கொண்டிருப்பதில் பயனில்லை. சர்வதேசத்தின் பிராந்திய நலன்களுக்கு ஒத்திசைவான போக்கில் செயற்பட்டு அரசியல், இராஜதந்திரம் மற்றும் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து சிறீலங்கா அரசாங்கம் தன்னை பாதுகாப்பதிலேயே அதிக கவனம் செலுத்திவருகின்றது.

இவ்வேளையில் ஐக்கிய நாடுகள் ஆணையாளரின் கைவிரிப்பானது நடைபெற்ற இனவழிப்புக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் கடப்பாட்டில் இருந்து சிறீலங்கா அரசாங்கம் வெகுவாக விலகிச்செல்வதை மேலும் ஊக்குவிப்பதாகவே அமைந்துவிடும் அபாயமேற்பட்டுள்ளது. சிறீலங்கா அரசாங்கம் மட்டுமல்ல இனவழிப்பு போரிற்கு சகல வழிகளிலும் ஆதரவினை வழங்கிய சர்வதேச சமூகமும் தனது பொறுப்புக்கூறல் கடப்பாட்டில் இருந்து விலகிச் செல்வதன் அறிவிப்பாகவே ஆணையளரின் நிலைப்பாட்டினை பார்க்க வேண்டியுள்ளது.

சர்வதேசத்தின் கதவுகளும் இனிமேல் எமக்காகத் திறக்கப்போவதில்லை என்ற கையறுநிலையில் ஒரே ஒரு தீர்வுதான் எம்முன் உள்ளது. தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை முன்னிறுத்தி உறுதியாக செயற்படதக்க அரசியல் தலைமையை தமிழர்கள் ஒன்றுபட்டு ஏற்படுத்துவதன் மூலமே இதனை வெற்றிகொள்ள முடியும் என்றும் அவர் அந்த அறிக்கையில் அனந்தி சசிதரன் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]