என்ன நடக்கிறது கொழும்பில்? ஓர் ஆழமான பார்வை

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 3 வருடங்கள் கடந்துள்ள நிலையில், கொழும்பு அரசியல் தீவிர நிலையை தற்போது அடைந்துள்ளது. கடந்த சனிக்கிழமை (10) இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர், கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பம் மீண்டும் தீவிரமடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

யாரும் எதிர்பாராத வகையில், உள்ளுராட்சி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரிய வெற்றியை பதிவுசெய்ததையடுத்து, கொழும்பு அரசியல் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியது.

உள்ளுராட்சி மன்ற தேர்தலானது மத்தியில் ஆட்சியை மாற்றுவதற்கு உரிய தேர்தல் அல்ல என்பதும், அது உள்ளுராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் குப்பையகற்றல் மற்றும் நகர முகாமைத்துவத்துடன் தொடர்புடைய குட்டி தேர்தல் என்று அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், தேர்தல் பெறுபேறுகள் அதனை தலைகீழாக மாற்றி, மத்தியில் ஆட்சி மாற்றம் தேவை என்றளவுக்கு நிலையை ஏற்படுத்திவிட்டுள்ளது.

தேர்தலின் பின்னர் ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பல தரப்பிலும் கருத்துகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அதனை நிறைவேற்றியாக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவே உள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனித்து ஆட்சியமைக்க வேண்டும் என்றும், புதிய அரசாங்கத்தில் பிரதமரான நிமால் சிறிபால டி சில்வாவை நியமிக்கும்படியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வலியுறுத்தி வருகின்றனர்.

அமைச்சர்களான சுசில் பிரேம ஜெயந்த, மஹிந்த அமரவீர ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெற்ற ஒருவரை பிரதமராக நியமிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவ்வாறு செய்வதாயின், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமித்து பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க சந்தர்ப்பம் அளிக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிப்பதற்கு கூட்டு எதிரணியினர் எந்தவித எதிர்ப்பையும் வெளியிடவில்வை என்று சுதந்திரக் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவர் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.

எனினும், நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமித்தாலும் கூட்டு எதிரணியானது அரசாங்கத்தில் இணையாது என்றாலும்,சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை எதிர்க்காது என்றும் அந்த அமைச்சர் கூறியிருந்தார்.

எனினும், தற்போது நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமாராக நியமிக்குமாறு பேச்சு அடிப்படும் நிலையில், அதற்கான எந்தவித உத்தியோகப்பூர்வ அறிவிப்புகளோ சாத்தியக்கூறுகளோ வெளிப்படையாக தெரியாத இந்த சமயத்தில், நிமால் சிறிபால டி சில்வாவுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சர் நிமல்சிறிபாலடி சில்வாவை பிரதமராக நியமிக்க எதிர்ப்பு தெரிவிப்பதாக அகில இலங்கை மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் சங்கம் நேற்று (15) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களை துன்பத்துக்குள்ளாக்கும் வகையில், 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணத்தை விதிக்க அதிக அழுத்தத்தை நிமால் சிறிபால டி சில்வா வழங்கியதாக முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்ததாக அந்த சங்கத்தினர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டு மக்களின் நலனை கவனத்தில் எடுக்காத ஒருவரிடம் மிக முக்கிய பொறுப்பான பிரதமர் பதவியை வழங்கினால் பாரிய விளைவுகளுக்கு மக்கள் முகங்கொடுக்க நேரிடும் என்றும் அந்த சங்கத்தினர் சுட்டிகாட்டியுள்ளனர்.

இதனிடையே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை தமது கட்சி ஏற்றுக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற ஒருவரை பிரதமராக நியமித்து புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஜனாதிபதி சந்தர்ப்பம் தர வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்து தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் மேற்பார்வை அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளுக்கு கூட்டு எதிரணி ஆதரவு அளிக்க முன்வந்திருப்பதாக கூறப்பட்டது.

அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவும், பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவும் இந்தப் பேச்சுக்களில் இந்த வார ஆரம்பத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 96 உறுப்பினர்கள் உள்ளதுடன், ஐதேக உறுப்பினர்களான அத்துரலியே ரத்தன தேரர் மற்றும் விஜேதாச ராஜபக்ஷ ஆகியோரின் ஆதரவையும் இவர்கள் பெற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க மேலும் 13 ஆசனங்கள் தேவைப்படும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி அல்லது ஏனைய சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் நிச்சயம் பெற முடியாது என்பது தெரிந்ததே.

இவ்வாறான ஒரு நிலையில், பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை அகற்றும் முயற்சிகளை, கூட்டு எதிரணியுடன் இணைந்து,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பன தீவிரப்படுத்தியுள்ளதால், கொழும்பு அரசியலில் குழப்பங்களைத் தீர்க்கும் முயற்சிகள் மீண்டும் பலவீனமடைந்துள்ளன.

அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் நாட்டு மக்கள் இருக்கும் நிலையில், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது குறித்து இந்தியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விரும்பவில்லை என்றே தெரிகின்றது. கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு அரசியல் பரபரப்பின் எல்லையில் இருந்த சந்தர்ப்பத்தில் இலங்கைக்கான இந்திய மற்றும் அமெரிக்க உயர்ஸ்தானிகர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தனித்தனியக சந்தித்து பேசியிருந்தனர்.

என்ன விடயங்கள் குறித்து அதன்போது பேசப்பட்டன தொடர்பான விவரங்கள் வெளிவராத நிலையில், நிச்சயம் இலங்கையின் ஆட்சிமாற்றம் தொடர்பில் அவர்களது விரும்பமின்மையை தெரிவித்திருக்க கூடும் என்று எதிர்பார்க்கலாம்.

அதனையடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை அன்றைய தினம் முழுவதும் அலரி மாளிகைக்கு கட்டம் கட்டமாக அழைத்து பேசியிருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களை கொழும்புக்கு அழைத்து சந்தித்திருந்தார்.

இவ்வாறான நிலையில், ஐ.தே.கவுடனான தேசிய அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலகி தனியாக ஆட்சியமைக்குமாக இருந்தால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளிக்க தாம் தயாராக உள்ளதாக ஒன்றிணைந்த எதிரணி நேற்று(15) திடீரென அறிவித்திருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக சபாநாயகர் கரு ஜெயசூரியவை நியமிக்குமாறும், பிரதமராக சஜீத் பிரேமதாசவை நியமிக்குமாறும் பல்வேறு தரப்பினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் அதனை நிராகரித்திருந்தனர்.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் ரணிலை அலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர பதவியை இராஜினாமா செய்ய வேண்டாம் என்று கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியானது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்திருந்தார்.

எனினும், நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் ராஜித்த சொல்வது முழுப்பொய் என்றும், பிரதமருடன் தொடர்புகொண்டு அவ்வாறு தான் கூறவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். அத்துடன், இவ்வாறான பொய்கள் சொல்வதை அமைச்சர் ராஜித நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

நிலைமை இவ்வாறு இருக்கும் நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்க போவதாக முன்னதாக தெரிவித்திருந்த நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனியான அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இலங்கை அரசியலில் ஒரு நிலையில்லாத தன்மை தோன்றியுள்ளது.

எனினும் தேசிய அராசங்கம் தொடர்ந்தும் நீடிக்கும் என்று எதிர்பார்க்க முடியும். இந்நிலையில், தற்போதுதான் உள்ளுராட்சி மன்ற தேர்தல் எனும் சிறிய பூகம்பம் இலங்கை அரசியலை சுழன்றடிக்க செய்துவிட்டுள்ள நிலையில், அடுத்த அரசியல் சுனாமிக்கு தயாராகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

அதாவது, மகாணசபை தேர்தலை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடத்த முடியும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் எதிர்வரும் மே மாதமளவில் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வில் நேற்று (15) தெரிவித்திருந்தார். கூட்டாட்சி அரசாங்கத்தில் குளறுபடிகள் நிறைந்திருக்கும் நிலையில், அதனை சீர்செய்யாமல் மற்றுமொரு தேர்தலுக்கு அரசாங்கம் தயாரா என்ற கேள்விக்கு இல்லை என்பதே பதில்.

இது இவ்வாறு இருக்க அடுத்த வாரமளவில் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சர் ராஜித இதனை தெரிவித்திருக்கின்றார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசாங்கம் அமைக்க வேண்டிய தேவை இல்லை என்று தெரிவித்துள்ள நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இரு நிலைப்பாட்டில் இருப்பதாக பேசப்படுகின்றது.

அக்கட்சி நுவரெலியாவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து ஆட்சியமைக்கும் என்று பகிரங்கமாக அறிவித்த நிலையில், பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் எம்.பி, ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்ததுடன், ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்களுக்கு தலையாட்டுவதாக தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கத்துக்கு பிரதியமைச்சர் பதவியை ஜனாதிபதி வழங்கியுள்ளார். இவருக்கு பதவி வழங்கப்பட்டமை குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணி என்ன விதமான பதிலை வெளிப்படுத்தப்போகின்றது என்பது இனிதான் தெரியவரும்.

அரசியலின் ஸ்திரமற்ற தன்மை இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கும் வழிகோலியுள்ளது. அதாவது உள்ளுராட்சி மன்ற தேர்தலை அடுத்து இலங்கை ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அமெரிக்க டொலருக்காக இலங்கை ரூபாயின் பெறுமதி நாளுக்கு நாள் சரிவை நோக்கி செல்லும் நிலையில், இலங்கை இறக்குமதி செலவு அதிகரித்து, பணவீக்கம் அதிகரிக்கும் நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது. வாக இறக்குமதியாளர் சங்கம்வேறு வாகன விலை 10 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என்று பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.

அரசியல் நிலை இவ்வாறு இருக்கும் போது, சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்னாயக்க பதவி விலக போவதாக அறிவித்துள்ள நிலையில், அவருக்கு பதிலான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நியமித்து முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுக்கு எதிரான விசாரணைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு சிவில் சமூக அமைப்பான “புரவெசி பலய” கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அதிகாரத்துக்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றிய “புரவெசி பலய” அமைப்பு, தற்போதைய அரசியல் குழப்பங்களைத் தீர்த்து, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் ராஜபக்ஷக்களுக்கு எதிரான நீதித்துறை சார்ந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு சிறிசேன- ரணில் அரசாங்கம் தவறியுள்ளது. அதன் விளைவு தான், பெப்ரவரி 10 தேர்தல் முடிவுகள். இந்த நடவடிக்கையை எடுப்பதற்கு சரத் பொன்சேகாவுக்கு 6 மாத கால அவகாசத்தை அரசாங்கம் அளிக்க வேண்டும்.

ராஜபக்ஷக்களின் வழிகாட்டலின் கீழ், இரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்ட, ஆயுதப்படை அதிகாரிகளுக்கும் படையினருக்கும் எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சீருடையில் தவறுகளைச் செய்த கொலைகாரர்களும், வல்லுறவாளர்களும், சீருடைக்குப் பின்னால் மறைந்து தப்பிக் கொள்ள அனுமதிக்கப்படக் கூடாது என்றும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறான ஒரு நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறப்பு உரையொன்றை இன்று ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அதனை இரத்து செய்துவிட்டதாக இன்று தெரிவிக்கப்பட்டது. எனினும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இன்றைய தினம் தனித்தனியாக சிறப்புரை ஆற்றவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலுக்கு பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாய்திறக்காத நிலையில், அவரது உரை அடுத்த அரசியல் நகர்வை தீர்மானிக்கும் ஒன்றாக எதிர்பார்க்கலாம். அதனைபோலவே ஜனாதிபதியின் உரையும் இந்த அரசாங்கத்துக்கு ஆயுள் கூட்டுமா இல்லை கூட்டரசுக்கு விவாகரத்தா என்பது குறித்து அறிந்துகொள்ள அடுத்து வரும் மணித்தியாலங்கள் கொழும்பு அரசியலில் பரபரப்பானவை என்றுதான் சொல்ல முடியும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]