என்னோட பெயரை மட்டும் மிஸ்யூஸ் பண்ணல….: விஷால் ஆதங்கம்

தனது படத்தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் பிலிம் ஃபேக்டரி’ இன் அதிகாரபூர்வ பேஸ்புக் வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நடிகர் விஷால், தன்னுடைய பெயரில் வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். அத்தோடு, ஐ.ஏ.எஸ் சகாயம் பெயரில் இயங்கும் பேஸ்புக் பக்கம் ஒன்றில், மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை சரி என்று தான் சொல்லியதாக யாரோ வேண்டுமென்று பதிவொன்றை இட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

vishal

மாணவர்கள் நடத்திய இந்த போராட்டத்தை பயன்படுத்தி, யார் வேண்டுமென்றாலும், விளம்பரம் தேடிக்கொள்ளலாம். ஆனால், அது என்னுடைய நோக்கம் அல்ல எனவும் விஷால் அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார். மேலும், மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக ‘பி.சி.ஏ” சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், இனி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்ற சூழல் உருவாகியுள்ள இந்த நேரத்தில், சில விஷமிகள் தன் பெயரை பயன்படுத்தி வதந்திகளை பரப்புவதாக குறை கூறினார்.

என்னை பழி வாங்குவதற்கு இது சரியான இடமில்லை என கூறிய விஷால்,வேறு தளத்தில் வேண்டுமென்றால் என்னோடு மோதிப் பாருங்கள் என சவால் விட்டார். தான் ஒருபோதும் மாணவர்களின் போராட்டத்திற்கு எதிரானவன் அல்ல என தெரிவித்த அவர், என்னுடைய பெயரை மட்டுமல்ல சகாயம் அவர்களின் பெயரையும் சேர்த்து சிலர் களங்கம் விளைவிப்பதாகவும் சொல்லி தன் வீடியோவை முடித்துக் கொண்டார்.