என்டிஆர் வாழ்க்கையை புரட்டிப்போட்ட லட்சுமி பார்வதி கதை படமாக

மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் வாழ்க்கையில் நுழைந்து அவரது அரசியல் வாழ்க்கையை புரட்டிபோட்டவர் லட்சுமி பார்வதி. பேட்டி எடுப்பதற்காக வந்தவரை என்டிஆர் வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொண்டார் என்று அப்போது தகவல்கள் வெளியாகின. இந்த சர்ச்சைகள் எல்லாம் முடிந்து அம்மாநிலம் ஆந்திரா, தெலங்கானா என இரண்டாக பிரிந்து வெவ்வேறு அரசியல் சூழல்கள் நிலவி வருகிறது. இந்நிலையில் பழைய கதையை கிளறத் தொடங்கியிருக்கிறார் சர்ச்சை மன்னன் இயக்குனர் ராம் கோபால் வர்மா. லட்சுமி பார்வதி வாழ்க்கையை, ‘லட்சுமிஸ் என்டிஆர்’ என்ற பெயரில் படமாக்குகிறார்.

விவகாரமான படங்களை அவ்வப்போது இயக்கும் வர்மாவுக்கு அடிக்கடி எதிர்ப்பு வருவதுபோல் இப்படத்துக்கும் எதிர்ப்பு கிளம்பும் என்று எதிர்பார்த்த நிலையில் சம்மந்தப்பட்ட குடும்பத்தினர் இதுவரை எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காததால் இப்படம்பற்றிய விவரங்கள் அமுங்கிக் கிடந்தன. தற்போது சர்ச்சையை கிளப்பும் வகையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டிருக்கிறார் வர்மா. இருள் சூழ்ந்த ஹாலில் என்டிஆர் சேரில் அமர்ந்திருப்பதுபோலவும், வீட்டு வாசலில் காலணியை கழற்றி வைத்துவிட்டு அவரது வீட்டுக்குள் வலது கால் எடுத்துவைத்து லட்சுமிபார்வதி நுழைவதுபோலவும் அந்த ஸ்டில் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த படத்தை இயக்குவதற்கு, என்டிஆர் குடும்பத்தினரிடமோ, லட்சுமி பார்வதி குடும்பத்தாரிடமோ வர்மா அனுமதி பெற்றாரா என்ற விவரமும் தெரியவில்லை. ஆந்திராவில் என்டிஆர் குடும்ப வாரிசுகள் இன்றைக்கும் திரையுலகில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் இப்படத்தை வர்மா எப்படி எடுப்பார் என்ற கேள்வியும், அதற்கான எதிர்விளைவுகள் எப்படி இருக்கும் என்பதும் போகப்போகத்தான் தெரியும் என்று திரையுலகினர் கூறுகின்றனர். ஏற்கனவே மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை கதையை படமாக்க உள்ளதாக வர்மா அறிவித்திருந்தார். பிறகு அதை கைவிட்டார். தற்போது லட்சுமி பார்வதி கதையை அறிவித்திருக்கிறார். அதையாவது படமாக்குவாரா என்றும் சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர்.