எந்த காரணம் கொண்டும் மீண்டும் ரணிலை பிரதமராக நியமிக்கமாட்டேன்- அடம்பிடிக்கும் மைத்திரி

இலங்கையின் பிரதமர் பதவி கடந்த ஒக்டோபர் மாதம் 26 ம் திகதி தொடக்கம் பெரும் நெருக்கடிக்குள் மாட்டி தவிக்கிறது.

புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்பது தெளிவாக விளங்கி விட்டது.

அவர் மேல் மூன்று தடவைகள் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் அவரினதும் அவரின் கீழாக இயங்கும் அமைச்சுகளினதும் நிதி ஒதுக்கீட்டை தடுக்கும் பிரேரணை மீதும் கொண்டு வரப்பட்ட வாக்கெடுப்புகள் வெற்றியளித்துள்ள நிலையிலும் அதனை இன்னமும் ஜனாதிபதி மைத்திரிபால ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆனால் நேற்று மஹிந்தவின் பிரதமர் பதவி மீதும் அமைச்சரவை மீதும் மேன் முறையீட்டு நீதிமன்றம் கொண்டுவந்துள்ள இடைக்கால தடை உத்தரவின் பின்னர் இறுதி முடிவை எடுக்க வேண்டிய கட்டத்தில் ஜனாதிபதி மைத்திரி உள்ளார்.

இந்நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியை ஜனாதிபதி மைத்திரி சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் புதிய பிரதமர் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என பலத்த எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் விடயத்தில் மைத்திரி எந்த விட்டுக்கொடுப்புக்கும் தயாராக இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

ரணில் விக்ரமசிங்விற்கு 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு கொடுத்தால் கூட எந்த காரணம் கொண்டும் அவரை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் என  ஜனாதிபதி மைத்திரிபால கூறியுள்ளார்.

எனினும் ஐக்கிய தேசிய முன்னணி தமது நிலைப்பாட்டின் படி அடுத்த பிரதமராக மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளனர்.

அதன் காரணமாக நேற்றைய சந்திப்பு எந்தவித ஆக்கபூர்வ முடிவும் இல்லாமல் முடிவடைந்தது. இதன் காரணமாக தொடர்ந்தும் அரசியல் சிக்கல் நிலை தொடரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]