எந்தத் தேர்தலென்றாலும் நாங்கள் களமிறங்கத் தயார்

எந்தத் தேர்தலென்றாலும் நாங்கள் களமிறங்கத் தயார் – செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட்

நாடாளுமன்றத் தேர்தலோ அல்லது மாகாண சபைத் தேர்தலோ எது முதலில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டாலும் அந்தத் தேர்தலில் களமிறங்கத் தயார் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரததித் தலைவருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

சமகால அரசியல் கள நிலவரங்கள் சம்பந்தமாக தெளிவுபடுத்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களுடனான சந்திப்பு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரின் ஏறாவூர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை 18.11.2018 இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதேச அரசியல் முக்கியஸ்தர்கள், ஏறாவூர் நகர மேயர், ஏறாவூர் நகரசபை ஸ்ரீலமுகா உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இக்கலந்துரையாடலின்போது சமுகமளித்திருந்தனர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர், தற்போதைய அரசியல் இழுபறி தொங்கு நிலைமையின்படி எப்படிப் பார்த்தாலும் நாடாளுமன்றத்தைக் கலைப்பதே உசிதமானது எனும் முடிவுக்கு சர்ச்சைக்குரிய இரு சாராரும் வரப்போகிறார்கள்.

அந்த வகையில் கிட்டிய சமீப சில தினங்களில் தேர்தல் களங்கள் சூடுபிடிக்கப் போகின்றன.

வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்து தேர்தலுக்குப் போவதையே பிரதமர் மஹிந்த தரப்பு விரும்பியிருந்தது. ஆனால், அதனையும் விட மிக இலகுவான வேறு வழிகளைக் கையாண்டு அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார்கள்.

இந்த அரசியல் இழுபறிகளுக்குள் முஸ்லிம் சமூகம் மூக்கை நுளைத்தக் கொண்டு தடுமாற வேண்டியதில்லை.

எந்தத் தரப்பு வந்தாலும் அவர்கள் பேரினவாத சிந்தனையின் மைய நீரோட்டத்திலிருந்தே தோற்றம் பெற்றவர்கள் என்பதை ஊகித்தறிந்து கொள்வதற்கு அதிக நேரமெடுக்காது.

ஏனெனில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அனைவரது செயற்பாடுகளும் ஏதோ ஒருவகையில் இனவாத மையக் கருத்தின் வெளிப்பாடாகவே இருந்து வந்துள்ளதை இப்பொழுதும் காண்கின்றோம். இதற்கு முன்னரும் கண்டுள்ளோம்.

எனவே, உள்ளவற்றில் சிறிதளவாவது நல்லது உள்ள பக்கம் சமயோசிதமாக காய் நகர்த்தி நமது உரிமைகளைப் பெற்றுக் கொள்ளும் வழிவகைகள் பற்றிச் சிந்திப்பதே தற்போதைய கால கட்டத்தில் அறிவுடமையாகும்.

கலப்புத் தேர்தல் முறையை ரணில் விக்கிரமசிங்ஹவும் ஜனாதிபதியும் கொண்டுவந்த பயன்பாட்டைப் பற்றி விவரிப்பதாயின் அது “தங்கத் தட்டில் முஸ்லிம்களுக்கு பன்றி இறைச்சியைக் கொண்டு வந்து கையில் கொடுத்த சங்கதிதான்.”

ஆனால், அதனையும் ஆராய்ந்து பார்க்காமல் நம் அரசியல்வாதிகள் “ஆமா சாமி” போட்டுவிட்டு பின்னர் ஒப்பாரி வைத்ததுதான் மிச்சம்.

எனவே, இவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்ப்பதற்கு பட்டறிவுப் பலத்தோடு கூடிய அரசியல் அதிகாரமும் சாணக்கியமும் தேவை.

அந்த அதிகாரத்தைப் பெற்று உரிய இடத்தில் ஆளுமை செலுத்தி சமூகத்திற்கு முடிந்ததைச் செய்தாக வேண்டும் என்ற நோக்கில் எதிர்வருகின்ற எந்தத் தேர்லிலும் களமிறங்குவதைத் தவிர வேறு வழியில்லை.

எந்தத் தேர்தலென்றாலும் எந்தத் தேர்தலென்றாலும்

தேசியப் பட்டியல், போனஸ் ஆசனம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

காத்தான்குடியில் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஓட்டமாவடி, வாழைச்சேனைப் பகுதியில் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீரலி தலைமையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இருக்கின்ற சூழ்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தளமாக இருக்கின்ற ஒரேயொரு களம் ஏறாவூர்தான்.

எனவே, இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தளத்தை உறுதிப்படுத்தி அரசியல் அதிகாரத்தைப் பெற வேண்டும்” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]