எதிர்வரும் யூன் மாதம் மரநடுகை மாதம் – ஆளுநர் ரெஜினோல்ட் குரே

எதிர்வரும் யூன் மாதம் மரநடுகை மாதம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால், யாழ். நகரை பசுமையாக்கும் திட்டத்தில் 4 ஆயிரம் மரக்கன்றுகளை யாழ்.நகரப்பகுதியில் நாட்டும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.
வடமாகாண ஆளுநர் அலுவலத்தில் இன்று காலை 11.30 மணியளவில் (15) யாழ்.நகரை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பில், வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன், மற்றும் யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

அதன்போது, எதிர்வரும் யூன் மாதம் 05 ஆம் திகதி மரம்நடுகை மாதம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மர நடுகை வேலைத்திட்டத்தினை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வடமாகாணத்தில் காடு அழித்து மோசமான வறட்சியை ஏற்படுத்தியுள்ளார்கள். அதனால் பொது மக்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். எனவே, எதிர்கால சந்ததியிருக்கு இந்த நிலமை ஏற்படக்கூடாது. இந்த செயற்திட்டத்தினை மத்திய அரசாங்கமும், ஆளுநர் அலுவலகமும், வடமாகாண சபையும், யாழ்.மாநகர சபையும் இணைந்து 4 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வறட்சி பிரதேசங்களை கவனத்தில் எடுத்து அந்தந்த பிரதேசத்திற்கு ஏற்றவாறு, தெங்கு, தேக்கு, மாமரம், நெல்லிமரம், ஜம்பு நாவல், சவக்கு, சுந்தர வேம்பு, பூவரசு உள்ளிட்ட மரக்கன்றுகளை நடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த மரங்களை நடுவதற்கான இடங்களை யாழ்.மாநகர சபை தெரிவு செய்துள்ளனர்.
குறிப்பாக யாழ். பண்ணை உட்பட பண்ணை கடற்கரை வீதி, காரைநகர், கொழும்புத்துறை மற்றும் சென்.பற்றிக்ஸ் வீதி, கடற்கரை வீதி ஆகிய வீதிகளில் இந்த மரநடுகைகள் இடம்பெறும்.

யாழ்.மாநகர சபை மற்றும் பாடசாலை அதிபர்கள் மரங்களுக்கான உரம் இடும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். யாழ.; நகரத்தினை பச்சை நிற தோற்றமுடையதாக மாற்றமுடியுமென்ற நம்பிக்கை இருக்கின்றது. இந்த இலக்கினை வெற்றியடையச் செய்ய பொது மக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பல்கலைக்கழகமாணவர்கள், உறுப்பினர்கள், அரச அதிபர்கள், வணிகர் கழகத்தினர், பொது அமைப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

அதேவேளை, இந்த வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த லயன்ஸ் கழகம், மற்றும் வணிகர் கழகத்தினர், றொட்ரிக் கழகத்தினர் மரங்களை வழங்குவததென உறுதியளித்துள்ளார்கள்.

600ற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை பொது இடங்களிலும், ஏனைய மரங்களை பாடசாலைகளிலும் நடுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, எதிர்வரும் காலங்களில் பசுமை நகரமாக மாற்றுவதற்கும் வறட்சியைப் போக்குவதற்கும், ஆரம்கட்டமாக இந்த மரநடுகை மாதம் அமைந்துள்ளதென்றும், அதனூடாக வடமாகாணத்தில் வறட்சி நிலமையை போக்கி, பசுமையான நகரமாக மாற்ற அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.