எமக்களிக்கும் வாக்குகள் ஒவ்வொன்றும் உங்கள் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் – டக்ளஸ்

டக்ளஸ்

நீங்கள் எமக்களிக்கும் வாக்குகள் ஒவ்வொன்றும் உங்கள் எதிர்காலத்தை நிச்சயம் ஒளிமயமாக்கும் – வவுனியாவில் டக்ளஸ் தேவானந்தா!

கடந்த காலங்களைப் போன்று எதிர்காலங்களிலும் பசப்பு வார்த்தைகளுக்கும் உசுப்பேற்றல்களுக்கும் உணர்ச்சிப் பேச்சுக்களுக்கும் நீங்கள் ஆட்படாது சரியான வழிமுறையாக எம்மைத் தேர்ந்தெடுத்தால் உங்களது பல்வேறு பிரச்சினைகளுக்கும் நாம் உரிய தீர்வுகளைப் பெற்றுத்தருவோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு வவுனியா பேயாடிக் கூழாங்குளம் பகுதிக்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்டுள்ள செயலாளர் நாயகம் அப்பகுதி மக்களுடனான சந்திப்பில் கலந்துரையாடுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

வடக்கு மாகாணசபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வென்றெடுத்தபோது தமிர் ஆட்சி மலர்ந்தது என்று பெருமைப்பட்டார்கள். அத்துடன் அந்த மாயைக்குள் மக்களையும் வீழ்த்தியிருந்தார்கள்.ஆனால் இன்று அவர்கள் கூறிய தமிழர் ஆட்சி என்பது வாடியுள்ளதை மக்கள் எல்லோரும் உணர்ந்துள்ளார்கள்.

300 க்கும் அதிகமான தீர்மானங்களை நிறைவேற்றிய வடக்கு மாகாண சபை ஆட்சியாளர்களால் மக்கள் நலன்சார்ந்த எவ்விதமான செயற்பாடுகளையும் இன்றுவரை முன்னெடுக்க முடியவில்லை.

இதற்குக் காரணம் அவர்களுக்கு மக்கள் மீதான அக்கறையோ அவற்றை செயற்படுத்தக் கூடியதான ஆற்றலோ இல்லாமைதான் முக்கியமான காரணமாக உள்ளது. அந்தவகையில் அவர்களை தெரிவுசெய்த மக்கள் இப்போது ஏமாற்றப்பட்டுள்ளனர்.

கடந்தகாலங்களில் யாரை நம்பி நீங்கள் வாக்களித்தீர்களோ அவர்கள் உங்கள் வாக்குகளால் வெற்றிகளை தமதாக்கி தமது சுயநலன்களையும் சுகபோகங்களையும் மட்டுமே அனுபவித்து வருகின்றனர்.

ஆனால் இனிவருங் காலங்களில் இதுபோன்று தவறான தலைமைகளை தெரிவுசெய்யாது கிடைக்கும் சந்தர்ப்பங்களில் நாள்தோறும் மக்களுடன் நின்று மக்களுக்காக பணிபுரியும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய எம்மை வெற்றிபெறச் செய்யுங்கள்.

நாம் உங்களுக்காக உழைக்கத் தயாராகவே இருக்கின்றோம். அத்துடன் நீங்கள் எமக்களிக்கும் வாக்குகள் ஒருபோதும் வீணாகப்போகாது. உங்கள் எண்ணங்களை அது ஈடேற்றும் என்பதை நாம் திட்டவட்டமாகக் கூறவிரும்புகின்றேன் என்றும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]