எதிர்கட்சி பதவியை விட்டுக்கொடுக்க போவதில்லையென சுமந்திரன் திட்டவட்ட அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து நடத்தும் கூட்டாட்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பே பிரதான எதிர்கட்சியாக இருக்கும் அதனை யாரும் மறுக்க முடியாது. அதனால் நாம் எதிர்கட்சி பதவியை விட்டுக்கொடுக்க போவதில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பதவியேற்ற பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் எதிர்கட்சி பதவியை வழங்குமாறு கோரி வருகின்றனர்.இவ்விடயம் தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுமந்திரன் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

“2015 ஆம் ஆண்டுதேசியஅரசாங்கம் உருவாக்கப்பட்டபோது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்தே ஆட்சியை முன்னெடுத்து சென்றனர். இந்நிலையில் அரசியலில் சில முரண்பாடுகள் ஏற்பட்ட போதிலும் இருவரும் மீண்டும் இணைந்து ஆட்சியை மேற்கொள்ள முன்வந்துள்ளனர்.

அந்தவகையில் நாட்டின் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாப்பதற்காகவே ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவை வழங்கினோம். வேறு எந்தவொரு உள்நோக்கமும் இல்லை.

இதனால் தேசிய அரசாங்கம் நாட்டை ஆட்சி செய்யும் வரை தமிழ் தேசிய கூட்டமைப்பே பிரதான எதிர்கட்சியாக செயற்படும்” என எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]