முகப்பு News Local News எங்களைப் பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவதை எப்படி ஏற்றுக் கொள்வது – க.இன்பராசா

எங்களைப் பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவதை எப்படி ஏற்றுக் கொள்வது – க.இன்பராசா

எங்களைப் பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவதை எப்படி ஏற்றுக் கொள்வது – க.இன்பராசா

நாங்களும் இந்த நாட்டின் குடிமக்கள், இறந்த எம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினால் சட்டமும் ஒழுங்கும் எப்படி சீர்கெடும். நாங்கள் புனர்வாழ்வு பெற்று சமுகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டவர்கள் மேலும் மேலும் எங்களைப் பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவதை எப்படி ஏற்றுக் கொள்வது என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்துள்ளார்.

கரும்புலிகள் அஞ்சலி நிகழ்வு தொடர்பில் பரப்பப்படும் இனவாத கருத்துக்களுக்குப் பதில்கூறும் முகமாக அவரால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த 05ம் திகதி வடக்கு கிழக்கில் இடம்பெற்ற கரும்புலிகள் தின நினைவின் பின் தெற்கில் சில சிங்கள இனவாதிகளால் பரப்பப்படும் இனவாத அறிக்கைகளுக்குப் பதிலாக இந்த அறிக்கையைப் பதிவிடுகின்றேன்.

கரும்புலிகள் தின அஞ்சலி நிகழ்வுக்கு அரசினால் தடை விதிக்கப்படவும் இல்லை அது தொடர்பான எந்தவித சுற்றறிக்கையும் அரசால் வெளியிடவும் இல்லை.

இந்த நிகழ்வு இரகசியமாகச் செய்யப்பட்ட ஒன்று அல்ல. பகிரங்கமாகவே பாதுகாப்பு தரப்பினரின் பிரசன்னத்தில் அவர்களின் முன்னிலையில் இடம்பெற்றது.

கரும்புலிகள் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்ற எந்த ஒரு இடத்திலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் எவ்வித பயங்கரவாத செயலும் அல்லது அது தொடர்பான எவ்வித ஊக்குவிப்பும் இடம்பெறவில்லை என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

போராளிகளாக இருந்த நாங்கள் ஜனநாயக ரீதியாகப் புனர்வாழ்வு பெற்ற அனைத்துப் போராளிகளையும் உள்ளடக்கி ஆயுதப் போராட்டத்தை முற்றுமுழுதாக நிராகரித்து ஜனநாயக அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க தேர்தல் திணைக்களத்தில் முன்பதிவு செய்துள்ளோம்.

தற்போது தெற்கில் இருந்து இனவாதக் கருத்துக்களைப் பரப்பி சிங்கள மக்களுக்கு தவறான கருத்துக்களைப் பகிரங்கப்படுத்தி மீண்டும் ஒரு தமிழ் சிங்கள மோதலை உருவாக்கி தற்போதையை நல்லிணக்க அரசின் செயற்திட்டத்தை நிலைகுலைய வைப்பதும், தங்களின் சுயநல அரசியலுக்காக அரசியல் வங்குரோத்து நிலையை செய்ய நினைக்கும் சரத் பொன்சேக்கா, விமல் வீரவங்ஸ போன்றோரை முதலில் கைது செய்து புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும்.

நாங்களும் இந்த நாட்டின் குடிமக்கள் இறந்த எம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினால் சட்டமும் ஒழுங்கும் எப்படி சீர்கெடும். நாங்கள் புனர்வாழ்வு பெற்று சமுகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டவர்கள் மேலும் மேலும் எங்களைப் பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவதை எப்படி ஏற்றுக் கொள்வது என்பதை தெற்கில் உள்ள சிங்கள மக்கள் தான் பதில் கூற வேண்டும்.

மேலும் மேலும் எங்களைச் சட்ட ஒழுங்கைச் சீர் குலைப்பவர்கள், பயங்கரவாதத்தை உருவாக்குகின்றார்கள் என்று தொடர்ந்தும் இவர்கள் கூறுவார்களானால் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் திம்பு முதல் ஜெனீவா வரை 22 சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் பங்குகொண்ட அனைவருமே பயங்கரவாதிகள் தனே அவர்களையும் கைது செய்ய வேண்டுமே.

எனவே நானும் எனது கட்சி உறுப்பினர்களும் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் இடம்பெறக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாகவுள்ளோம் என்பதைப் பதிவு செய்ய விரும்புகின்றேன். அதனால் ஜனநாயக ரீதியான அரசியலில் களமிறங்கியுள்ளோம் என்பதை பகிரங்கமாக நாட்டு மக்கள் அனைவருக்கும் பகிரங்கப்படுத்துகின்றேன் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com