ஊவா மாகாண சபையில் கலவரம் – பலர் படுகாயம்

ஊவா மாகாண சபை

ஊவா மாகாண சபையின் முன்னால் ஏற்பட்ட கலவரத்தின் போது, சபை உறுப்பினர்களை ஆ. கணேசமூர்த்தி, உபாலி சேனாரட்ண ஆகியோர் கடுங்காயங்களுக்குள்ளாகி, விசேட அம்புலன்ஸ் வாகனங்கள் இரண்டின் மூலம், பதுளை அரசினர் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டனர்.

இச்சம்பவம் ஊவா மாகாண சபைக்கு முன்னால் இன்று இடம்பெற்றுள்ளது.

இன்று முற்பகல் 10 மணியளவில் ஊவா மாகாண சபைக்கு முன்னால், மாகாண தமிழ்க்கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்ற செந்தில் தொண்டமானுக்கு வரவேற்பு அளிக்கும் முகமாக விசேட நிகழ்வு ஆரம்பமானது.

அவ்வேளையில், ஊவா மாகாண சபை அமர்வும் இன்றைய தினம் நடைபெற்றதினால், அச்சபை அமர்விற்கு வருகை தந்த சபை உறுப்பினர்களான ஆ. கணேசமூர்த்தி மற்றும் உபாலி சேனாரட்ன ஆகியோர் சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.எம். ரட்ணாயக்கவின் வாகனத்தில் சபைக்குள் வாயிற்கதவால் உள் நுழைந்தனர்.

அப்போது, அங்கு திடீரென்று வந்த குழுவினர், சபை உறுப்பினர் ஆ. கணேசமூர்த்தியை பலமாகத் தாக்கியுள்ளனர். அத்துடன் பாதுகாக்க முனைந்த சபை உறுப்பினர் உபாலி சேனாரட்ணவும் தாக்கப்பட்டார்.

தாக்கப்பட்ட பின்னரும் அவர்கள் சபை அமர்வில் சமூகமளித்து வருத்தம் கடுமையானதினால், அவர்கள் இருவரையும் தூக்கிச் சென்று, அம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றினர். பதுளை அரசினர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சந்தர்ப்பத்தில் மத்திய அமைச்சர் ஹரின் பெர்ணந்து, வடிவேல் சுரேஸ் எம்.பி. ஆகியோரும் அவ்விடத்திற்கு விரைந்தனர். இவ்வேளையில், கலகம் அடக்கும் பொலிஸார் பெருமளவில் ஊவா மாகாண சபை முன்பாக குவிக்கப்பட்டனர்.

அத்துடன் வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்ட மக்களை பொலிசார் வெளியேற்றினர். அப்போது இடம்பெற்ற சம்பவத்தில் வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்ட மக்களில் ஒன்பது பேர் 9 பேர் தாக்கப்பட்டு, அவர்களும் பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இருபக்கத்திலும் தாக்கியவர்களை பதுளை பொலிசார் தேடி வலை விரித்துள்ளனர். இச் சம்பவத்தின் போது சபையின் எதிர்க்கட்சித் தலைவரின் வாகனத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

சபை அமர்வு ஆரம்பமானதும், மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க உரையாற்றுகையில், “ஊவா மாகாண சபைக்கு முன்னால் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறமாட்டாது. சம்பவத்தில் காயமுற்ற சபை உறுப்பினர்கள் விடயத்தில் பெரும் கவலையடைகின்றேன். சபை உறுப்பினர்களுக்கு பூரண பாதுகாப்பு வழங்கப்படும்” என்றார்.

மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தமதுரையில், “ஏற்பட்ட சம்பவத்தினை நானும் வன்மையாகக் கண்டிக்கின்றேன். சபை உறுப்பினர்களுக்கு பூரண பாதுகாப்பு வழங்க வேண்டும். சபைக்கு வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு போதாது” என்றார்.

சபை உறுப்பினர்கள் பலரும்,ஏற்பட்ட சம்பவத்தை கட்சிபேதமின்றி அனைவருமே கண்டித்தனர்.

ஊவா மாகாண சபைக்கு முன்னால் இடம்பெற்ற இச்சம்பவம் வரலாற்றில் தடம்பதிக்க வேண்டியதொன்றாகும். இச்சம்பவம், ஊவா மாகாண சபைக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக, சபையினர் ஜே.வி.பி. உறுப்பினர் சமந்த வித்தியாரட்ண உரையாற்றினர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]