ஊவா கல்வி அமைச்சின் செயலாளர் தற்காலிகமாக பதவி நீக்கம்

பதுளை பாடசாலை ஒன்றின் பெண் அதிபரொருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் முடியும் வரை ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அம்பன்வல, பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக ஊவா மாகாண ஆளுநர் எம்.பி.ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு ஆளுநரின் பணிப்பின் பேரில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபரை முதலமைச்சர் அச்சுறுத்தும் வேளையில் ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட நபர்கள் இருந்ததாகவும் முதலமைச்சர் விடுத்த கோரிக்கையை நிறைவேற்றுமாறு அவர்கள் அதிபரை வற்புறுத்தியதாகவும் ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியிருந்தது.

இதேவேளை, ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர், பதுளை வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் தொடர்பிலும் மாகாண ஆளுநரின் பணிப்பின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் நிறைவடையும் வரை அவர்களும் பதவிகளிலிருந்து நீக்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.