ஊடகங்கள் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துகிறது: மங்கள சமரவீர

ஊடகங்கள் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துகிறது: மங்கள சமரவீர

நாட்டிலுள்ள ஊடகங்கள் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படுகின்றது என நிதி மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நாட்டிலுள்ள ஊடகங்கள் உண்மையான தகவலை வெளியிடுவதனை காட்டிலும் பரபரப்பான செய்திகளை வெளியிடுவதில் மிகவும் ஆர்வமாகவுள்ளது.

ஊடகங்கள் மக்களுக்கு உண்மையான தகவல்களை வழங்குவதில் நேர்மையாக இருக்க வேண்டும். அதனைதான் நாமும் எதிர்பார்க்கின்றோம்.

ஆனால் தற்போதுள்ள ஊடகங்கள் பரப்பரப்பான செய்திகளை வெளியிட்டு மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படுகின்றது.

அதில் உண்மையான தகவல்களை வெளியிட தவறி விடுகின்றது. சிங்கப்பூர் உடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திட்டபோது அவ்விடயம் தொடர்பில் வெளியான தவறான தகவலை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.

மக்களுக்கு சரியான தகவலை கொண்டு சேர்ப்பதே ஊடகத்தின் மிகப்பெரிய பொறுப்பாகும். அந்தவகையில் கருத்து சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரம் ஆகிய இரண்டும் அடிப்படை மனித உரிமைகள் என்பதே எமது கொள்கையுமாகும்.

மேலும் உலகலாவிய ரீதியில் ஊடக சுதந்திரத்தில் 138ஆவது இடத்தில் இருந்த இலங்கை, இவ்வருடம் 131 ஆவது இடத்தை அடைந்துள்ளது. அதனை முதலாம் இடத்திற்கு கொண்டு வருவதற்கு பல காலங்கள் செல்லும்.

இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில் ஊடகங்கள் சுதந்திரமான நிலைமையில் இயங்குகின்றது’ எனவும் மங்கள சமரவீர சுட்டிகாட்டியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]