உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை ஜனவரி இறுதியில் நடத்த தீர்மானம்

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை ஜனவரி இறுதியில் நடத்த தீர்மானம்

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் வரும் ஜனவரி மாதம் 25க்கும், 31க்கும் இடைப்பட்ட ஒரு நாளில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

பல உள்ளூராட்சி சபைகளுக்கு பலவருடங்களாகத் தேர்தல் நடத்தப்படவில்லை. உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வருவது,உள்ளூராட்சி சபைகளின் எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வது ஆகியவற்றில் ஏற்பட்டிருந்த கால தாமதமே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில்,உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான சட்டத் திருத்தமும் இந்த தாமதத்திற்கு காரணம் என கூறப்பட்டிருந்தது.

இத்தகைய கால தாமதம் காரணமாக முறையாக நடைபெற்றிருக்க வேண்டிய உள்ளூராட்சிசபைகளுக்கான தேர்தல்கள் கால வரையறையின்றி தள்ளிபோயுள்ளது.

வடமாகாணத்தில் இரண்டு உள்ளூராட்சி சபை பிரதேசங்களில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் முடிவு பெறாமல் இருக்கும் சூழலில், இரண்டு சபைகளுக்கான தேர்தல்களுக்கான வேட்பு மனுக்களில் விதிமுறைகள் மீறப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததாலும் உள்ளூராட்சிசபைகளுக்கான தேர்தலை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.

உள்ளூராட்சி சபைக்கான தேர்தல்கள் 60 சதவீதம் வட்டாரங்கள் மற்றும் தொகுதி அடிப்படையிலும் 40 சதவீதம் விகிதாசாரத் தேர்தல் முறையிலும் நடத்தப்படும் என்று உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அத்துடன் தேர்தல் சட்ட திருத்தத்தின் மூலம் உள்ளூராட்சித் தேர்தலில் பெண்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபைகளுக்கான எல்லைகளும் மீள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

இத்தகைய பின்னணியிலேயே தேர்தலுக்கான தேதி பற்றிய அறிவித்தல் வெளியாகியிருக்கின்றது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய விடுத்துள்ள அறிக்கையின்படி, வரும் டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையில் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]