உள்ளூராட்சி சபைகளின் முதல் அமர்வு ஒத்திவைப்பு

அமர்வு ஒத்திவைப்பு

உள்ளூராட்சி சபைகளின் முதல் அமர்வு மார்ச் 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில், “புதிதாக தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபைகளின் முதலாவது அமர்வு, பெப்ரவரி 15ஆம் திகதி நடைபெறும் என்று வர்த்தமானி அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டது.

ஆனால், முதல் அமர்வு மார்ச் 2ஆம் திகதி நடைபெறும். இதுதொடர்பான புதிய வர்த்தமானி அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியிடப்படும். கடந்தவாரம் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரியவுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

பெப்ரவரி 15ஆம் திகதி முதல் அமர்வை நடத்துவது நடைமுறைச் சாத்தியமற்றது. ஒவ்வொரு உள்ளூராட்சி சபைகளினதும் உறுப்பினர்களின் பட்டியலைத் தயார் செய்வதற்கு நீண்ட காலஅவகாசம் தேவை.

நேரடியாக வட்டார ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் விவரங்கள் ஏற்கனவே தெரியவந்துள்ளது. ஆனால், விகிதாசார முறையில் கிடைத்துள்ள ஆசனங்களுக்கான தமது பிரதிநிதிகளின் பட்டியலை அரசியல் கட்சிகள் முன்மொழிய வேண்டும்.

இதனை கட்சிகளின் பொதுச்செயலாளர்கள் தான் செய்ய வேண்டும். அதற்கு குறிப்பிட்ட காலஅவகாசம் தேவை. இதனால், முதல் அமர்வை பெப்ரவரி 15ஆம் திகதி நடத்துவதற்குப் பதிலாக மார்ச் 2ஆம் திகதி பிற்போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]