உள்ளூராட்சிமன்ற தேர்தல் வாக்களிப்பு தொடங்கியது

340 உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் ஆரம்பமானது.

இன்று காலை 7 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை வாக்களிப்பு இடம்பெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நேரகாலத்துடன் சென்று வாக்களிக்குமாறும் ஆணைக்குழு கோரியுள்ளது.

முதல் முறையாக நேரடி மற்றும் விகிதாசார முறை இணைந்த – புதிய முறையாலான உள்ளூராட்சித் தேர்தல் இன்று நடைபெறுகின்றது.

மொத்தமுள்ள 341 உள்ளூராட்சி சபைகளில், உச்சநீதிமன்றத்தினால் தடைவிதிக்கப்பட்ட எல்பிட்டிய பிரதேச சபை தவிர்ந்த 340 சபைகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

24 மாநகர சபைகள், 41 நகர சபைகள், 275 பிரதேச சபைகளுக்காக, 8,356 உறுப்பினர்கள் இன்று தெரிவு செய்யப்படவுள்ளனர்.

வட்டார முறையில், நடைபெறும் தேர்தலில் 4750 வட்டாரங்களில் தனி ஒரு உறுப்பினர் தெரிவு செய்யப்படுவார். 169 பல உறுப்பினர் தெரிவு வட்டாரங்களும் உள்ளன.

இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் மற்றும், உறுப்பினர்கள் நியமனம் என்பனவற்றில் பெண்களுக்கு முதல் முறையாக 25 வீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில், 56,066 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களைத் தெரிவு செய்வதற்காக வாக்களிப்பதற்கு 15,760,867 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

13,374 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணிக்கு முடிவடையும்.

வாக்களிப்பு முடிந்ததும், மாலை 5 மணியளவில், வாக்களிப்பு நிலையத்திலேயே வாக்குகளை எண்ணும் பணி தொடங்கப்பட்டு, முடிவுகள் வெளியிடப்படும்.

இறுதி முடிவுகள் தேர்தல் திணைக்களத்தின் ஊடாக, மாலை 7 மணிக்குப் பின்னர் வெளியிடப்பட ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்குகளை எண்ணும் பணி, 6823 நிலையங்களில் நடைபெறும். அதேவேளை தபால் வாக்குகள், 3,852 இடங்களில் எண்ணப்படும்.

தேர்தல் பணிகளில், 173,383 அரச பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புக் கடமைகளில், 4,178 சிறப்பு அதிரடிப்படையினர் உள்ளிட்ட 65,758 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]