தேர்தல் களத்திலுள்ள ஊடகவியலாளர்களுக்கு எதிராக முறைப்பாடு

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடும் ஊடகவியலாளர்கள் அவர்களுடன் தொடர்புடைய பத்திரிகைகளை மற்றும் இலத்திரனியல் ஊடகங்களை பயன்படுத்தி, அவர்களின் வேட்ப்பான்மையை ஊக்குவிக்கும் வகையிலும் ஏனைய அரசியல் காட்சிகளையும் வேட்பாளர்களையும் பின்னடைவு செய்யும் வகையிலும் செய்திகள் வெளியிடுவதாகவும்/ ஒளிபரப்புகள் மேற்கொள்வதாகவும் பல முறைப்பாடுகள், தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக, தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அனைத்து அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் தலைவர்கள், பிரதம நிறைவேற்று அலுவலர்கள், செய்திப் பணிப்பாளர்கள் மற்றும் ஊடக வழிகாட்டல் தொடர்பான செயற்பாட்டு அங்கத்தவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள செய்தியறிக்கையிலேயே, இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கையொப்பமிட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ள குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“உங்கள் நிறுவனத்தின் நிரந்தர பணிக்குழுவின் ஊடகவியலாளர்கள், பிராந்திய ஊடகவியலார்கள் மற்றும் உங்கள் நிறுவனத்துடன் ஒன்றிணைந்து செயற்படுபவர்களுள் யாரேனும் கட்சியொன்றின்/ குழுவொன்றின் வேட்பாளரொருவராக இருப்பாராயின், அவர்களால் வெளியிடப்படும் செய்தியறிக்கைகள், ஒளிபரப்புகள் என்பவற்றின்பால் விசேட கவனம் செலுத்தப்படுதல் வேண்டுமென தயவன்புடன் அறிவித்துக்கொள்கின்றேன்.

“அத்தகையவர்களின் வெளியீடுகளின் மூலம், அவர்களது வேட்பாண்மையை ஊக்குவிக்க அல்லது வேறொரு கட்சியை/ குழுவை/ வேட்பாளரை பின்னடைவு செய்விக்க எத்தகைய இடமளிக்கலாகாது.

“அத்துடன், பத்திகைகளுக்கு அல்லது இலத்திரனியல் ஊடகங்களுக்கு அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும் பிராந்திய/ தனிப்பட்ட ஊடகவியலாளர்களால் வழங்கப்படும் தகவல்களைப் பரீட்சித்துப் பார்த்து அது உண்மையான தகவல் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள முடியுமாயின் மாத்திரம் அத்தகவல்களை வெளியிடுவதற்கு, ஒளிபரப்புவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

“அத்தகவல்களை வெளியிடுவதன் மூலம், தேர்தல் காலப்பகுதியினுள் ஏதேனுமொரு கட்சியை அல்லது எவரேனுமொரு வேப்பாளரை ஊக்குவிக்கும் வகையிலாள அல்லது பின்னடைவு செய்விக்கும் வகையிலான செய்திகள் உள்ளடங்கப்பட்டுள்ளனவா என, அவற்றை வெளியிடுவதற்கு முன்னர் பரீட்சித்துப் பார்த்து அறிந்துகொள்ள வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]