உள்ளூராட்சிசபைத் தேர்தலை கலப்புமுறையில் : சிறுகட்சிகளுக்கு கிடைத்த வெற்றி – மனோ

உள்ளூராட்சிசபைத் தேர்தலை கலப்புமுறையில் நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள முடிவானது சிறுகட்சிகளின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரான அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு,

கடந்த தேர்தல்கள் நடைபெற்ற ஒட்டுமொத்த விகிதாசார முறைமை கைவிடப்பட்டு தேர்தல்கள் புதிய வட்டார, விகிதாரா கலப்பு முறையில் நடைபெறும்.

இது தொடர்பில் கடந்த மகிந்த ஆட்சியில் 2012ஆம் வருடம் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தில் வட்டார, விகிதாசார தெரிவுகள் தொடர்பாக இருந்த 70:30 என்ற கணக்கு, எமது புதிய திருத்த சட்டத்தில் 60:40 ஆக மாற்றப்படும்.

அதேபோல் இரட்டை அங்கத்தவர் வட்டாரத்தில், ஒரே கட்சியில் இரண்டு வேட்பாளர்கள் போட்டியிட முடியாது என்றும், இரண்டாம் அங்கத்தவராக வெற்றி பெறுகின்றவர், தோல்வியடைந்த கட்சிகளில் அதிக வாக்குகளை பெற்றவராக இருத்தல் வேண்டும் என்ற மோசடித்தனமான பழைய விதி மாற்றப்பட்டு, ஒரே கட்சியே இரண்டு வேட்பாளர்களை போட்டியிட செய்ய முடியும் என்ற திருத்தம், புதிய திருத்த சட்டத்தில் வரும்.

அத்துடன் இரட்டை அங்கத்தவர் வட்டாரத்தில் ஒவ்வொரு வாக்காளரும், இரண்டு வாக்குகளை அளிக்க முடியும். இவை சிறுபான்மை கட்சிகள் சார்பாக நாம் தொடர்ச்சியாக முன்னெடுத்த போராட்டத்தின் மூலம் கிடைத்த வெற்றிகளாகும்.’ என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]