உள்ளுராட்சி மன்ற தேர்தலின் முதலாவது பெறுபேறு வெளியாகும் நேரம்

நாளை நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்ற தேர்தலின் முதல் பெறுபேறு இரவு 7.00 அளவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வாக்குகள் குறிப்பிட்ட உள்ளுராட்சி மன்றத்தில் வட்டார வாக்களிப்பு நிலையங்களிலேயே 3 கட்டங்களாக இடம்பெறும்.

முதலாவது கட்டத்தில் ஒவ்வொரு வாக்குப்பெட்டிகளிலுமுள்ள வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்படும். இரண்டாம் கட்டமாக அந்த வட்டாரத்திற்கு உட்பட்ட தபால் மூல வாக்குகள் எண்ணப்படும்.

இந்த தபால் மூல வாக்குகளின் எண்ணிக்கை 50இற்கு அதிகமாக இருந்தால் தனியாகவும் , 50க்கு குறைவாக இருப்பின் அவை ஏனைய வாக்குகளுடன் கலந்து எண்ணப்படும்.

மூன்றாம் கட்டத்தின் கீழ் ஒவ்வொரு கட்சி அல்லது சுயேட்சை குழுக்களினால் பெற்ற வாக்குகள் வெவ்வேறாக எண்ணப்படும்.

வாக்குகள் எண்ணப்படும்போது சந்தேகம் தொடர்பாக ஏதேனும் கட்சி அல்லது சுயேட்சைக்குழுக்களின் முகவரினால் முன்வைக்கப்படும் கோரிக்கைக்கு அமைவாக வாக்குகள் எண்ணும் முகவரினால் வாக்குகள் மீள எண்ணப்படும் .

இந்த கோரிக்கைகளுக்கு அமைவாக வாக்குகள் இரண்டு தடவை மாத்திரமே எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.