உள்ளுராட்சித் தேர்தல் காலத்தில் சர்வமதப் பேரவை உறுப்பினர்களது பணி பொறுப்புவாய்ந்ததாக இருக்க வேண்டும். தேசிய சமாதானப் பேரவையின் திட்ட இணைப்பாளர் விஜயநாதன் துஷாந்த்ரா
உள்ளுராட்சித் தேர்தல் காலத்தில் சர்வமதப் பேரவை உறுப்பினர்களின் பணி பொறுப்பு வாய்ந்ததாக இருக்க வேண்டும் என தேசிய சமாதானப் பேரவையின் திட்ட இணைப்பாளர் விஜயநாதன் துஷாந்த்ரா தெரிவித்தார்.
உள்ளுராட்சித் தேர்தலின்போது இடம்பெறக் கூடிய இனவாத உணர்ச்சியூட்டல்கள் குறித்து எச்சரிக்கையாய் இருக்க வேண்டியதன் அவசியம் பற்றி மட்டக்களப்பு மாவட்ட சர்வ மதப் பேரவை உறுப்பினர்களுக்காக அவர் இந்த வேண்டுகோளை செவ்வாய்க்கிழமை 02.01.2018 முன் வைத்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், உள்ளுராட்சித் தேர்தல் இடம்பெற முன்பாகவும் தேர்தல் சமயத்திலும் தேர்தல் முடிவுற்ற பின்னரும் பிரதேசத்தில் இனமுறுகல் உருவாக்கப்படும் சூழ்நிலைகளை மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவை உறுப்பினர்கள் உன்னிப்பாகக் கவனித்து எதிர்வினையாற்ற வேண்டும்
சமூக, இன ஐக்கியத்தையும் சகல சமூகங்களினதும் இயல்பு வாழ்க்கையையும் குழப்பும் எந்தவொரு முன்னெடுப்புக்களையும் பிரதேசத்திலுள்ள மாவட்ட சர்வமத உறுப்பினர்கள் பொறுப்புடன் கவனிக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் அத்தகைய சமூக விரோத நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்படும் சூழ்நிலைகளைத் தடுக்கும் வண்ணம் விரைந்து நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்.
இலங்கை தேசிய சமாதானப் பேரவை மற்றும் இலங்கையில் அனைத்து மதங்கள் மற்றும் அனைத்து இனங்களுக்கிடையில் நிலைத்து நிற்கக் கூடிய சகவாழ்வுக்கான செயற்திட்டங்களில் தங்களை அர்ப்பணித்துள்ள ஆசிய மன்றம், பிரிட்டிஷ் கவுன்ஸில் என்பன இனமுறுகலை ஏற்படுத்தும் சூழ்நிலைகளைத் தடுப்பதற்கான அக்கபூர்வ முயற்சிகளில் அதிக அக்கறை கொண்டுள்ளன.
இத்தகைய சூழ்நிலைகளை எந்தத் தரப்பினர் தோற்றுவித்தாலும் அது தடுக்கப்பட வேண்டும். சட்டம், இந்pத விடயத்தில் ஏற்ற ஒழுங்குகளுக்கான நடவடிக்கைகளுக்கு தேசிய சமாதானப் பேரவை விரைந்து பணியாற்றும்.
இனப்பூசலை வளர்க்கும் எந்தவொரு சூழ்நிலைகளையும் உன்னிப்பாகக் கவனித்து அவற்றை எல்லாத் தரப்பினரோடும் இணைந்து தடுப்பதில் தேசிய சமாதானப் பேரவையின் மாவட்ட சர்வமத உறுப்பினர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்” என்றார்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universalta
Twitter – www.twitter.com/Universaltha
Instagram – www.instagram.com/universalt
Contact us – [email protected]