உலக தாய்மொழி தினத்தை உயிர்ப்பிக்கும் விதத்தில் கிழக்குப் பல்கலைக்கழக அழகியற் கற்கைகள்

உலக தாய்மொழி தினத்தை உயிர்ப்பிக்கும் விதத்தில் கிழக்குப் பல்கலைக்கழக அழகியற் கற்கைகள் நிறுவகம் அரும்பணியாற்றி வருகின்றது பணிப்பாளர் கலாநிதி சிவஞானம் ஜெயசங்கர்

உலக தாய்மொழி தினத்தை உயிர்ப்பிக்கும் விதத்தில் கிழக்குப் பல்கலைக்கழக அழகியற் கற்கைகள் நிறுவகம் அரும்பணியாற்றி வருவதாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி சிவஞானம் ஜெயசங்கர் தெரிவித்தார்.

பெப்ரவரி 21ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக தாய் மொழிகள் தினத்தையிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உலகின் பல பாகங்களிலும் இலங்கையிலும் வருடாவருடம் உலக தாய்மொழிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்தவகையில் இவ்வாண்டின் உலக தாய் மொழிகள் தினத்தை மொழி பெயர்ப்புக் கலையை முக்கியத்துவப்படுத்தும் தினமாக நாங்கள் வடிவமைத்திருக்கின்றோம்.

தமிழ்மொழி மிகப்பெரும்பாலும் ஆங்கிலமொழி வழியாகவே உலகத்தைப் பார்த்து வந்திருக்கிறது. ஆயினும் போரும் புலம்பெயர்வும் ஆக்கபூர்வமான ஒரு நிலைமையையும் ஈழத்தமிழர் வழியாக தமிழுக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

உலகின் பல்வேறு மொழிகளில் இருந்து நேரடியாகவே தமிழுக்கு விடயங்கள் மொழிபெயர்க்கப்படுவது நிகழ்ந்து வருகின்றது. இதன் அளவு சிறியதெனினும் அதன் கீர்த்தி மிகப்பெரியது.

ஆங்கில மொழிவழி கட்டமைக்கப்படும் உலக நோக்கிலிருந்து விடுவித்துக் கொண்டு யதார்த்தமான பலநோக்கு நிலைகளில் உலகை அறிவதற்கும் அறிவிப்பதற்குமான வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது.

இது தன்னார்வத்தில் இயங்கும் தனியாட்கள், சிறுகுழுக்கள், சிறுபத்திரிகைகள், நூல்வெளியீடுகள் என ஆங்காங்கே நிகழ்ந்து வருகின்றன.

மொழிபெயர்ப்பின் முக்கியத்துவம் உணரப்படாத அறிவுச் சமூகத்தில் தன்னார்வம் காரணமாக இயங்கிவரும் மொழிபெயர்ப்பாளரின் முக்கியத்துவத்தை உணரும் வகையிலும், உணர்த்தும் வகையிலும் உலக தாய்மொழிகள் தினம் பெப்ரவரி 21, 2018 வடிவம் பெற்றிருக்கின்றது.

அதனை அடியொற்றியதாக “மூன்றாவது கண்” எனும் உள்ளுர் அறிவுத் திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழுவினர், கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை, சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் என்பன தொடர்ச்சியாகவும் திட்டமிட்ட வகையிலும் உலக தாய்மொழி தினக் கொண்டாட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.

குறிப்பாக எண்ணிக்கையில் குறைந்தளவினரான சமூகங்களின் மொழிகள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொண்டு மேற்படி மொழிகளை புழக்கத்தில் வைத்திருப்பதற்கும், மீளப் புழக்கத்திற்குக் கொண்டுவரும் வகையிலான முன்னெடுப்புகளுக்கான தொடர் செயற்பாடுகளை உலக தாய்மொழி தினத்தை மையப்படுத்தி முன்னெடுத்து வருகின்றமை நடைமுறையில் இருந்து வருகின்றது.

தாய்மொழி வளத்திற்கும் வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்துவருகின்ற பல்வேறு துறைசார் ஆளுமைகளை வாழ்த்துவதும் குறிப்பாகப் பாரம்பரியமாக மருத்துவம், மாந்திரிகம், வேளாண்மை மற்றும் தொழிநுட்பம் உட்பட்ட கலை, பண்பாட்டுத்துறைகளின் துறைசார், ஆளுமைகளின் புலமைத்துவ பரிமாணங்களை அறிந்தும் உணர்ந்தும் கொள்ளும் வகைசெய்தல் முக்கியமான பணியாக முன்னெடுக்கப்படுகின்றது.

மேற்படி ஆளுமைகளையும் சிறுவர் மற்றும் இளையோர் குழாம்களை உரையாடலுக்கு ஒன்றிணைப்பதின் மூலமாக அறிவூட்டத் தொடர்ச்சியை வலுப்படுத்துவதுமான செயற்பாடுகள் உலக தாய்மொழி தினத்தையொட்டி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உலக தாய்மொழி தினம் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றிய செய்திகளை பரவலாக்கம் செய்வது ஆற்றுகைகள் மற்றும் அச்சு ஊடகங்கள், இலத்திரனியல் ஊடகங்கள், சமூக ஊடகங்கள் வழியாக நிகழ்த்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.