உலக அரங்கை அதிர வைத்த பியானோ சிறுவன் லிடியனுக்கு ஏ.ஆர். ரகுமான் பாராட்டு

பியானோ இசைக்கருவியை வேகமாக வாசித்து உலக அரங்கையே அதிர வைத்த சென்னை சிறுவன் லிடியன் நாதஸ்வரத்தை நேரில் சந்தித்து ஏஆர் ரகுமான் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அண்மையில் அமெரிக்க நாட்டில் ‘தி வேர்ல்ட் பெஸ்ட்’ என்ற பெயரில் ரியாலிட்டி ஷோ நடந்தது. இந்த போட்டியில் சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் என்ற சிறுவனும் கலந்து கொண்டார். இவர் 1900ம் ஆண்டு வெளிவந்த பிளைட் ஆப் தி பம்பிள்பி (Flight of the bumblebee) என்ற இசையை பியானோவில் வாசிக்கத் தொடங்கினார்.

முதலில் சாதாரணமாக வாசித்த சிறுவன் லிடியன், பின்னர் வேகமெடுத்து சடசடவென வாசித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அனைவரும் எழுந்து நின்று பாராட்ட, இதை விட தன்னால் பல மடங்கு வேகத்தில் வாசிக்க முடியும் என்று மீண்டும் வாசிக்கத் தொடங்கினார். முதலில் சாதாரணமாக வாசித்த சிறுவன், தொடர்ந்து நிமிடத்துக்கு 208 பீட்ஸ், அடுத்ததாக 325 பீட்ஸ் என்று வேகத்தின் உச்சிக்கு சென்று அசத்தினார்.

பியானோவில் லிடியன் புகுந்து விளையாடியதை அரங்கத்தில் இருந்த நடுவர்கள் உட்பட அனைவரும் மூக்கின் மேல் விரல் வைத்து பார்த்தனர். சிறிதும் பிழையில்லாமல், துணிச்சலாகவும் விவேகமாகவும் வாசித்த லிடியனின் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வர, அதனைப் பார்த்த பிரபலங்களும் ஆச்சரியமடைந்து தங்களது சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்து பாராட்டினர்.

இந்நிலையில், இன்று மாலை லிடியன் நாதஸ்வரத்துக்கு நடந்த பாராட்டு நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் கலந்து கொண்டு சிறுவனுக்கு வாழ்த்து தெரிவித்தார். இசையின் மந்திரத்தை வெளிபடுத்தியுள்ள லிடியன், சர்வதேச அளவில் இசை தூதராக லிடியன் வரவேண்டும் என்று பாராட்டினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]