உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!

”உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” என்னும் கோரிக்கைக் கோஷம் 130 ஆண்டுகளைத் தாண்டியும் உரத்துக் கேட்டுக்கொண்டே இருக்கின்றது.

எட்டு மணிநேர வேலையை வென்றெடுத்து 128 ஆண்டுகள் ஓடி மறைகின்றன. எனினும், எத்தனை இடங்களில் இன்னமும் தொழிலாளர்கள் எட்டு மணித்தியாலங்களுக்கு மேலாகவும் வேலை வாங்கப்படுகிறார்கள். எமது குடாநாட்டில் பெண் தொழிலாளர்கள் கண்மூடித்தனமாக அவ்விதம் வேலை வாங்கப்படுவதுடன், வேதனங்களும் மிகக் குறைவாகவே வழங்கப்பட்டு வருவதொன்றும் புதுமை அல்ல.

நாளொன்றுக்கு 18 மணி நேரங்களுக்கும் மேலாகத் தொழிலாளர்கள் மிருகத்தனமாக வேலை வாங்கப்பட்டதை எதிர்த்து எட்டு மணி நேரம் வேலை, எட்டு மணி நேரம் ஓய்வு, எட்டு மணி நேரம் உறக்கம் என்னும் மார்க்கத்தை வென்றெடுப்பதற்கு 1886ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் தொழிலாளர்கள் போராட்டம் தொடங்கினர்.

அவ்விதம் 1886இல் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தை நெறிப்படுத்தும் விதமாக 1885ஆம் ஆண்டே பாட்டாளி வர்க்கத்தினரிடையே அமெரிக்காவில் சுற்றறிக்கை ஒன்றில் போராட்டம் சம்பந்தமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு அடி கோலப்பட்டும் இருந்தது.

அதன்படி 1886ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி அமெரிக்காவில் நாடு தழுவிய அளவில் பொது வேலைநிறுத்தமொன்றை ஒன்றுபட்ட தொழிலாளர்கள் முழுமையாக முன்னெடுத்தனர்.

அந்தவகையில் இந்த வருடம் மே தினத்தின் வயது 132 என்றும் நினைவுகூரலாம். ஆயினும், 1889ஆம் ஆண்டு பிரட்றிக் ஏங்கல்ஸ் தலைமையிலான இரண்டாவது தேசிய ஸ்தாபக மாநாட்டில் வைத்தே “மே தினம்’ எனத் தொழிலாளர் தினத்துக்குப் பெயர் வழங்கப்பட்டது. அதனால் இந்த வருடம் 128ஆவது ஆண்டை மே தினம் எட்டிப்பிடித்துள்ளது.

ஆயினும், என்ன 90 சதவீத பலத்தைத் தன்னகத்தே கொண்ட பாட்டாளி வர்க்கம் இன்னமும் தலைதூக்க முடியாத அளவுக்கு 10 வீதமேயான முதலாளித்துவ சக்தி உலகைத் தன்னகத்தே கட்டிப்போட்டு வைத்துள்ள நிலைமைதான் வியாபித்து வளர்ந்துவருகிறது.


1886 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி பாட்டாளி வர்க்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை அமெரிக்க முதலாளி வர்க்கம், அரச கூலிப்படைகளின் துணைகொண்டு மிலேச்சத்தனமாக முறியடித்தது.
தொழிலாளர்கள் கிளர்ச்சியாளர்களது கேந்திர மையமாக விளங்கிய அமெரிக்காவின் சிக்காகோ நகரில் மட்டும் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வீதிகளில் இறங்கிப் போராடினர்.

அவர்களுக்கு எதிராக நீட்டப்பட்ட ஆளும் வர்க்கத்தின் காவல் படையான பொலிஸாரின் துப்பக்கிச்சூடுகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரத்தம் சிந்தி வீதிகளில் வீழ்ந்து மரணமடையவும் நேரிட்டது.
அதன் விளைவாக சிக்காக்கோ நகர வீதிகளில் இரத்த வெள்ளம் பாய்ந்தோடியது. பொலிஸாரது நடவடிக்கைகளுக்கு எதிராகக் கிளர்ச்சியாளர்களும் நடவடிக்கை மேற்கொண்டதால் கூலிப்படைத் தரப்பில் உயிரிழப்புகள் தோன்றின.

அதனைச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்திய அடக்குமுறையாளர்கள் ஆயிரக்கணக்கில் கிளர்ச்சியாளர்களையும், தொழிளாளர்களையும் சிறையில் பூட்டிப் பழி தீர்த்தனர். ஆயினும், முன்னெடுத்த போராட்டத்தில் சளைக்காமல் தொழிலாளர் இழப்புகளின் மத்தியிலும் முன்னேறிக்கொண்டிருந்தனர். தாக்குப்பிடிக்க முடியாமல்போன அடக்குமுறை வர்க்கம் முதன்முதலாக அடிபணிந்த வரலாற்றுத் தினமே “மே தினம்’ மலரக் காரணமாயிற்று.

முற்போக்குச் சிந்தனைகளுடன் சகலவிதமான அடக்குமுறைகளையும் அழித்தொழித்து முழுச் சமுதாயத்தையும் முன்னேற்றகரமான வழிக்கு அழைத்துச் செல்லும் நோக்குடன் 1871ஆம் ஆண்டு உடமைகள் இல்லாதவர்களின் பெயரில் அதிகாரத்தைக் கைப்பற்ற முதன்முதலாக பரிஸ் பாட்டாளி வர்க்கம் துணிந்தது.

அவ்வாறு தமது முற்போக்குப் பார்வையை முன்வைத்து பிரபலமான பரிஸ் கம்யூன் பிற்போக்குச் சிந்தனை கொண்ட பிரான்ஸ் புரூசிய துப்பாக்கிப் படைகளால் நிர்மூலம் செய்யப்பட்டும் இருந்தது. 1878ஆம் ஆண்டில் கடுமையான சட்டங்களைப் பிறப்பித்த அடக்குமுறையாளர்களின் கெடுபிடிகளால் புரட்சிகரக் கட்சி சட்டவிரோதமாக இயங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டும் இருந்தது.

பரிசில் அவ்வாறு சுடர்விட்ட சுவாலை முற்றாக அணைக்கப்பட்டது போன்று சிறிதுகாலம் இருந்து திடீரென எதிர்பாராத கோணங்களில் புதிய நோக்குடைய புரட்சிகரக் குமுறல்கள் கிளம்பி வெடித்தன.
அதன் அடிச்சுவடே வடஅமெரிக்காவில் கைத்தொழில் மிகுந்த நகரங்களில் ஒன்றான சிக்காகோ நகரில் 1886இல் முகிழ்ந்த பாட்டாளி வர்க்கத் தொழிலாளர்களது போராட்டமாகும்.

அந்தப் போராட்டத்தை நடத்திய தொழிலாளர்கள் அமெரிக்கர்களாக இருக்கவில்லை. ஜேர்மனி, பிரான்ஸ், அயர்லாந்து, ரஷ்யா, போலந்து, பொகிமியா நாட்டினர் பெருமளவில் கலந்துகொண்டிருந்தனர்.
படிப்பறிவு இல்லாதோர்.

அந்நிய மண்ணில் போராட்டம் நடத்துவதன் மூலம் உயிர் வாழ்வதற்குத் தள்ளப்பட்டவர்களில் பெரும்பாலானோர் படிப்பறிவு இல்லாத விவசாயிகளாக இருந்தனர். அதனிலும் ஜேர்மனியினர்களே அதிகமாகப் பங்கெடுத்திருந்தனர்.

மார்க்ஸ் ஏங்கல்ஸ் போன்ற முதலாவது பன்னாட்டுத் தொடர்புகொண்டிருந்த தத்துவஞானிகளது புதிய தீவிரவாதத் தலைமைத்துவம் ஜேர்மனியிலிருந்து வந்தவர்கள் மத்தியில் தோன்றியிருந்தது.
அதற்கு உறுதுணையாக தீவிரவாதக் குடியரசுவாதிகளாகத் திகழ்ந்த அமெரிக்கர்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்த போராட்டத்தின் நிமித்தம் அடக்குமுறையாளர்களை அடிபணிய வைத்து பெற்ற வெற்றியை உலகளாவியமட்டில் உழைக்கும் வர்க்கத் தொழிலாளர்கள் அனுபவித்தும் வருகிறார்கள்.

உலகத்

அமெரிக்காவின் சிக்காகோ நகரிலே குருதி சிந்திய போராட்டத்தில் அடைந்த வெற்றியின் தினமாக உலகெங்கும் இன்று 01.05.2017 மே தினம் 128ஆவது முறையாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான அத்திபாரம் 131 வருடங்களுக்கு முன்பாகவே இடப்பட்டிருந்ததை நினைவுகூரலாம்.
உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்! அரிவாளும் சம்மட்டியும் கரங்களில் ஏந்திய இருபால் தொழிலாளர்களும் வீதிகளில் இறங்கி ஊர்வலங்கள் செய்வதை இன்று பன்னாடும் எங்கணும் பரக்கக் காணலாம்!
பாட்டாளி வர்க்கம் குருதி சிந்திப் பெற்ற தொழிலாளர்களது மே தினத்தை இந்தக் காலங்களில் பூஷ்வாக்களான முதலாளிமார்களும் கொண்டாடும் காரணகாரியங்களைக் கண்டும் காணாமல் இருந்துவர முடியாது.
உண்மைத் தொழிலாளர்கள் அவர்களுக்கே உரிய கூட்டங்களில் கூடி முதலாளித்துவ பூஷ்வாக்களின் வேடமாதிரிகளை அறிந்து கொள்ளாமல் இருக்கவே பெருமெடுப்பில் வட இந்திய, தமிழகத் திரையுலகப் பிரபலங்களைக் கூட்டி வந்து காலிமுக மற்றும் ஐபார்க், விகாரமாதேவி பூங்காக்களில் விநோத வேடிக்கைக் கேளிக்கைகளில் ஈடுபடுத்தி வந்துள்ளமை ஒன்றும் புதிய விடயங்கள் அல்ல.

இதுவரைகாலமும் அதனைப் புரிந்து கொள்ளாமல் சிதறுண்டு போயிருக்கும் தொழிலாளர்கள் விழிப்படைந்து செயற்பட வேண்டிய காலகட்டம் எழுந்துள்ளது. தொழிலாளர்களின் பலவீனங்களைத் தமக்கு வசதியாக்கும் உபாயங்களால் சீர்குலைத்து வந்ததாலே இன்னமும் அதிகூடிய தொகையைக் கொண்டிருக்கும் தொழிலாள வர்க்கம் மேலெழ முடியாமல் இருந்தும் வருகிறது.

தொழிலாளர்களின் மறுமலர்ச்சிக்காக 18ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் சிக்காகோ நகரில் குருதி ஆற்றில் நீந்திப் பெற்ற உலகத் தொழிலாளர்களின் தோற்றுவிக்க முளைவிட்ட மகா விருட்சத்தின் தோற்றுவாய்க் குறிக்கோளாகும் என்பதை உலகத் தொழிலாளர் அனைவரும் மறந்துவிடக்கூடாது. கார்ல்ஸ் மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகிய ஆரம்ப கால தத்துவ ஞானிகளின் அந்தக் குறிக்கோளை மிக விரைவாக உலகெங்கும் ஏற்படுத்த மே தினமான இன்றே ஒன்றிணையும் உலகத் தொழிலாளர்கள் அனைவரிடமும் அறைகூவல் விடப்படுகிறது.

உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]