உயர் தர மாணவர்களுக்கு இராணுவத்தால் பேருந்து சேவை

தொடரூந்து பணியாளர்களின் திடீர் பணிப்புறக்கணிப்புக்கு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரூந்து பணியாளர்களது திடீர் போராட்டத்தின் காரணமாக, பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதுடன், நேற்று கோட்டை தொடரூந்து நிலையத்துக்கு முன்னால் பயணிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தினார்கள்.

அனைத்து அரச பணியாளர்களது வேதனம் குறித்து ஆராய்வதற்கான குழு ஒன்றை நியமிக்க அமைச்சர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதன்படி அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் தம்மால் இந்த விடயம் குறித்த அறிக்கை ஒன்றும் முன்வைக்கப்படவுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் தொடரூந்து பணியாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை கண்டனத்துக்கு உரியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தொடரூந்து பணியாளர்களின் போராட்டம் காரணமாக, இன்றையதினம் பரீட்சைக்குத் தோற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக விசேட பேருந்து போக்குவரத்து சேவைகள் நடத்தப்படவுள்ளன.

இதனை இராணும் மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அனைத்து அரச பேருந்து பணியாளர்களது விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் தேவை ஏற்படின் பாதுகாப்பு படையினரைக் கொண்டு பேருந்து சேவையை நடத்தவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதேநேரம் ஓய்வுபெற்ற தொடரூந்து இயந்திர சாரதிகளை இன்று காலை பணிக்கு திரும்புமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]