உமாஓயா திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் ; இ.தொ.கா. கோரிக்கை

மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பை கருத்திற்கொண்டு உமாஓயா திட்டம் தொடர்பில் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

உமாஓயா அபிவிருத்திட்டம் தொடர்பில் தற்போது எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும் ஊவாமாகாண அமைச்சருமான செந்தில் தொண்டமான் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

உமாஓயாதிட்டமானது நீர் பற்றாக்குறையாக காணப்படும் மாவட்டங்களுக்கு நீரினைபெற்றுக் கொடுக்கும்நோக்கில் முன்னாள் அரசு 2013ஆம் ஆரம்பித்தது.ஆனால், இத்திட்டத்தால் ஆயிரக்கணக்கான வீடுகளில் வெடிப்புகளும் நூற்றுக்கணக்கான கிணறுகளில் நீர் வற்றியும் மற்றும் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் நீர் இன்றியும் பாதிப்புக்குள்ளாகின.

உமாஓயா செயற்திட்டத்தின் காரணமாக இன்று பண்டாரவளை முழு நகரமே பாதிப்புக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதோடு, ஏழு தொடக்கம் எட்டாயிரம் வீடுகள் பாதிப்புக்குள்ளாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்தே மக்களின் பாதுகாப்பினை கருதி அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் முகமாக தொடர்ச்சியாக இத்திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. பல்வேறுதரப்பிலிருந்து வலியுறுத்தல்களும் முன்வைப்பப்பட்டுள்ளன.

வரட்சியான மாவட்டங்களுக்கு நீரினை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் ஆரம்பித்த இச்செயற்றிட்டத்திற்கு தற்போது இயற்கை ஒத்துழைக்காது இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுகின்றது. ஆகவே,கோடிக்கணக்கான நிதி இவ்வேலைத்திட்டத்திற்குச் செலவளிக்கப்பட்டிருப்பினும் எமக்கும் மக்களின் நலனே முக்கியமாகும்.

இத்திட்டம் தொடர்பாக அரசு மறு பரிசீலனை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். மக்களின் நலன் கருதி அவர்களின் பிரச்சனை மற்றும் பாதுகாப்பினை ஏற்படுத்தும் நோக்கில் அரசு செயற்பட வேண்டும் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]