உன்னிச்சையில் இருந்து பெறப்படும் குடிநீரை அப்பிரதேச மக்களுக்கும் வழங்குங்கள் – ஸ்ரீநேசன் எம்.பி

உன்னிச்சைக் குளத்தில் இருந்து பெறப்படும் குடிநீர் பல கிலோமீட்டர்களுக்கு அப்பாலுள்ள நகரங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்ற போதிலும், அவர்களது கிராமத்தில் இருந்து பெறப்படும் குடிநீரை அவர்களுக்கும் வழங்க முடியாத கையாலாகாத நிலையில் இந்த நல்லாட்சி அரசு உள்ளதா என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீர் வழங்குவது தொடர்பாக செவ்வாய்கிழமை (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் – மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உன்னிச்சைக் குளத்தில் இருந்து பெறப்படும் குடிநீரை உன்னிச்சைப் பிரதேச மக்களுக்கு வழங்கப்படாமல் இருக்கின்றது. உன்னிச்சைக் குளத்தில் இருந்து பெறப்படும் குடிநீர் பல கிலோமீட்டர்களுக்கு அப்பாலுள்ள நகரங்களுக்கு கொண்டுசெல்லப்படுகின்ற போதிலும், குளத்தில் இருந்து குறுகிய தூரத்தில் இருக்கும் உன்னிச்சை, ஆயித்தியமலை, மணிபுரம், நெல்லிக்காடு, மகிழவெட்டுவான், பாவற்கொடிச்சேனை, பன்சேனை, கரடியனாறு, மரப்பாலம், இலுப்படிச்சேனை, வேப்பவெட்டுவான், கொடுவாமடு போன்ற நீரின்றி வாடும் பல பிரதேசங்களுக்கு வழங்கப்படவில்லை. பாரபட்சமாக பல கிலோமீட்டர்கள் தாண்டி சில குறிப்பிட்ட நகரங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றது.

இது தொடர்பில் நீர்வழங்கல் அமைச்சருடன் பல தடவைகள் பேசியும், பாராளுமன்றில் பலமுறை தெரிவித்தும் இதுவரையில் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இப்பகுதியில் வாழும் 80 வீதத்திற்கும் அதிகமானோர் மாசடைந்த குடிநீரையே பருகுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்ற போதிலும், அவர்களது கிராமத்தில் இருந்து பெறப்படும் குடிநீரை அவர்களுக்கு வழங்க முடியாத கையாலாகாத நிலையில் இந்த நல்லாட்சி அரசு உள்ளதா என கேட்கத் தோன்றுகின்றது என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]