உதயங்க வீரதுங்கவை நாடு கடத்த மறுப்பு?

மிக் போர் விமானக் கொள்வனவு மோசடி தொடர்பாக தேடப்படும், ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை, நாடு கடத்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மறுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அமெரிக்காவுக்குச் செல்லும் பழியில் டுபாய் விமான நிலையத்தில் உதயங்க வீரதுங்க தடுக்கப்பட்டார். இதையடுத்து அவர் ஐக்கிய அரபு எமிரேட்சை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும், உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுக்கள் தோல்வியில் முடிந்திருக்கின்றன.

ஐக்கிய அரபு எமிரேட்சுக்கும் இலங்கைக்கும் இடையில் நாடு கடத்துதல் தொடர்பான உடன்பாடு செய்து கொள்ளப்பட்டுள்ள போதிலும், அது இலங்கை நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவில்லை.

இந்த நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து அவரை நாடு கடத்துவதற்கான உத்தரவைப் பெற்றுக் கொள்ளுமாறு அந்த நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் இலங்கை அதிகாரிகள் குழப்பமடைந்துள்ளதாக ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.