உடல் உள ரீதியாக வலிமை பெறுகின்ற சமூகம் ஒரு எழுச்சி கொண்ட சமூகமாக மாற்றமடையக்கூடும் – மாணிக்கம் உதயகுமார் தெரிவிப்பு!!

உடல் உள ரீதியாக வலிமை பெறுகின்ற சமூகம் ஒரு எழுச்சி கொண்ட சமூகமாக மாற்றமடையக்கூடிய வாய்ப்பு உள்ளது. உடல், உள ரீதியான ஆரோக்கியத்தை ஏற்படுத்திக் கொடுப்பதில் விளையாட்டுத்துறை மிக முக்கிய பங்குவகிக்கிறது இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராமங்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டி ஆறுமுகத்தான்குடிருப்பு பொதுமைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் – மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வருடாந்தம் பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டிக்கள் நடைபெறுகின்றன. விளையாட்டுத்துறை என்பது வெறுமனே ரசித்துக்கொண்டு போகின்ற துறை அல்ல. எங்களுடைய உடல் உள ஆரோகியத்தையும் பிரதேச அபிவிருத்தியையும் அடிப்படையாக கொண்ட துறையாக காணப்படுகிறது.

ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தில் கபடி மற்றும் எல்லே போட்டிகளில் தேசிய விருதுகளை வெற்றிபெற்ற வீரர்கள் இருக்கின்றார்கள். ஏனைய போட்டிகளிலும் விளையாட்டு நுட்பங்கள் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். இது தொடர்பாக விளையாட்டு வீரர்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும். வீரர்களை மாகாண தேசிய ரீதியில் வெற்றிகளைப் பெறுவதற்கு பயிற்சியளிக்க வேண்டும்.

விளையாட்டுத்துறை என்பது எதிர்காலத்தை கொண்டு செல்வதற்கு பங்களிப்புச் செய்யாது என்ற செயற்பாடுகளிலிருந்து மாற்றமடைந்து. தற்போதைய சூழ்நிலையில் அரச தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கான நேர்முகத் தேர்வுகளில் விளையாட்டுத்துறை சார்ந்த சாதனைகளுக்கு கூடுதலான புள்ளிகளை வழங்குகின்ற நடைமுறை தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் விளையாட்டுப்போட்டிகளில் காணப்பட்ட போட்டித் தன்மையும் மகிழ்ச்சியும் மனோரன்னியமான விளையாட்டு விழா தற்போதைய காலத்தில் காணமுடியவில்லை.

கிராமத்துக்கு ஒரு விளையாட்டு மைதானம் கட்டாயமாக தேவை பள்ளிக்கூடங்களைப் போன்று விளையாட்டு மைதானங்களும் நாங்கள் பயிற்சி பெறுகின்ற இடம் என்பதை நாங்கள் உணர்கின்றோம் அவற்றினை நிவர்த்தி செய்வற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]