ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 40 சபைகளிலும் போட்டி, 36% பெண்களுக்கான ஒதுக்கீடுகளையும் வழங்கியுள்ளது

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 40 சபைகளிலும் போட்டி, 36% பெண்களுக்கான ஒதுக்கீடுகளையும் வழங்கியுள்ளது

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி

யாழ்ப்பாணம்; வடகிழக்கில் 40 சபைகளில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி போட்டியிடவுள்ளதுடன், 36 வீதம் பெண்களுக்கான ஒதுக்கீடுகளையும் வழங்கியுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று (27) வெளியிடப்பட்டது.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமைச் செயலகத்தில் வைத்து செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தமது கட்சியின் தேர்தல் விஞ்ஞானபத்தினை வெளியிட்டு வைத்தார்.

அதன் பின்னர் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் 3 விடயங்களைப் பிரதானமாக முன்வைத்து தமது தேர்தல் விஞ்ஞாபத்தினை மக்களின் அபிவிருத்தி மற்றும் மக்கள் மாற்றுத் தலைமையுடன் பயணிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
வடகிழக்கில் 40 சபைகளில் போட்டியிடுவதுடன், 36 வீதம் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

அன்றாட பிரச்சினை, அபிவிருத்தி, அரசியலுரிமை அனைத்திற்குமான மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி, இணைந்த வடகிழக்கு நமது தாயகம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

கிராம அபிவிருத்திச் சங்கங்களை மேலும் மேம்படுத்தி, சுய தொழில்வாய்ப்புகளுக்கு உதவுதல், ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகள் தொழில்வாய்ப்புகளிலும் பங்கெடுக்க வழி செய்தல். விளையாட்டுக் கழகங்களை வலுப்படுத்தியும், உடற்பயிற்சி நடைபாதைகளை அமைத்தும் உடல், உள ஆரோக்கியம் பேணல்! ஊழலற்ற உள்ளுராட்சி மன்ற செயற்பாடுகளை முன்னெடுத்தல், ஏற்கனவே நடந்துள்ள ஊழல்களை விசாரித்து, சட்ட நடவடிக்கை எடுத்தல்.

உள்ளுராட்சி மன்றங்களை வலுப்படுத்த, விசேட திட்டங்களை உருவாக்குதல். வடக்கு – கிழக்கு மாகாணங்களில் மருதங்கேணி, கண்டாவளை, ஒட்டுசுட்டான், மடு, கோரளைப்பற்று வடக்கு, கோரளைப்பற்று (வாழைச்சேனை) ஆகிய புதிய பிரதேச சபைகளை உருவாக்குதல். மானிப்பாய், சங்கானை, நெல்லியடி, சுண்ணாகம், செங்கலடி, களுவாஞ்சிக்குடி, மூதூர், கிண்ணியா பிரதேச சபைகளை நகர சபைகளாகவும், வவுனியா, திருகோணமலை நகர சபைகளை மகா நகர சபைகளாகவும் தரமுயர்த்தல். கிளிநொச்சி, முல்லைத்தீவு நகரங்களுக்கு புதிய நகர சபைகளை உருவாக்குதல்! இத்தகைய ஏற்பாடுகளின் மூலமாகவும், தற்போது நிலவும் வேலைவாய்ப்புகளுக்கான வெற்றிடங்களை நிரப்பியும் சுமார் 5,000க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு அரச தொழில்வாய்ப்புகளை உருவாக்கி, வழங்குதல்! உள்ளுர் விவசாய செய்கையினை மேலும் ஊக்குவிக்கும் வகையில், புதிய சந்தைவாய்ப்புகளை ஏற்படுத்தல், வெளிநாட்டு இறக்குமதிகளுக்கு தடை விதிக்க ஏற்பாடுகள் செய்தல்! விவசாய உள்ளீடுகள் அனைத்தும் இலகுவாகக் கிடைக்க வழி செய்தல், அரச மானியங்களை, நிவாரணங்களை உடன் பெற்றுக் கொடுத்தல்.

நெடுந்தீவின் எமது வரலாற்று அடையாளமான குதிரைகளைப் பாதுகாத்து, பராமரித்தல். உள்ளுர் தரைவழி மற்றும் கடல் வழி படகுப் போக்குவரத்துச் சேவைகளை அதிகரித்து, தரமுயர்த்தி, உறுதி செய்தல்! சுற்றுலாத்துறையை விரிவாக்கி, தரமுயர்த்தி, எமது மக்களது பொருளாதாரத்தை அதிகரித்தல். சட்டவிரோத காடழிப்புகளைத் தடுத்து, மரங்களை நட்டு, பராமரித்து, சூழல் மாசுறுவதைத் தடுத்தல்! காட்டுவிலங்குகளில் இருந்து பாதுகாப்பையும், காட்டுவிலங்குகளுக்கான பாதுகாப்பையும் உறுதி செய்தல். சட்டவிரோத மணல் அகழ்வுகளைத் தடுத்து, நியாயமான மணல் விநியோகத்தை சீரமைத்து, கட்டுமானத் தொழிலுக்கான தடைகளை அகற்றல்! விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுத்து, போதையற்ற சமுதாயத்தைக் கட்டியெழுப்புதல், மாணவர்களின் பாடசாலை இடை விலகல்களை தடுத்தல். முன்பள்ளிகளை வலுப்படுத்தி, முன்னோடி சமூகத்தை உருவாக்குதல், ஆசியர் ஊதியத்தை அதிகரித்தல், மாணவர்களுக்கு போசாக்கு உணவளித்தல், சேமிப்புத் திட்டமொன்றை உருவாக்கல்.

செயலிழந்துள்ள கைத்தொழிகளை மீள செயற்படுத்துதல், வளங்களைப் பயன்படுத்தி, தொழிற்துறை வாய்ப்புகளை அதிகளவில் உருவாக்குதல். கிராமியப் பெண்களை வலுப்படுத்த, கைத்தொழில் முயற்சிகளை உருவாக்குதல். மாதர் சங்கங்களை வலுப்படுத்தி, இலகு கடன் முறைமைகளை அறிமுகப்படுத்தி, மாதர் சங்கங்கள் ஊடாக செயற்படுத்தல்.

 

நுண்கடன் தொல்லைகளிலிருந்து மக்களைக் காப்பாற்றும் வகையில் மேலும் பல்வேறு கடன் மற்றும் நிதித் திட்டங்களை சமூக அமைப்புகளின் ஊடாக செயற்படுத்தல்! குடும்பத் தலைமைகளை ஏற்றுள்ள பெண்களின் வறுமை போக்க வாழ்வாதாரங்களை மேம்படுத்தி, சமூகப் பாதுகாப்பு, வழிகாட்டல்களை வழங்குதல்! முன்னாள் இயக்கப் போராளிகளுக்கான வாழ்வாதாரங்களை ஏற்படுத்தி, அவர்களது வாழ்க்கையினை மேம்படுத்துதல்! பனை சார் தொழிலுக்கான வரிகளை நீக்கி, நவீன தொழிற்துறையாக மாற்றி, ‘ப்ளாஸ்ரிக்” – ‘பொலித்தீன்” உற்பத்திகளுக்கான மாற்றுத் தொழில் முயற்சிகளை உருவாக்குதல்! கண்ணிவெடிகளை முழுமையாக அகற்றுதல். வடக்கில் வாழும் மலையக மக்களுக்கு விஷேட ஏற்பாடுகள். எல்லைதாண்டும், அத்துமீறும் கடற்றொழில்களுக்கு முடிவுகட்டுதல். அத்துமீறிய குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தல்.

 

சமுர்த்தி நிவாரணம் பெறுகின்ற பயனாளிகள் பட்டியலை மீளப் பரிசீலித்து, தகுதியான பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல். மாற்றுத் திறனாளிகளுக்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்துதல்! யுத்தம் காரணமாக மாற்றுத் திறனாளிகளானவர்களுக்கு விஷேட திட்டங்கள், முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டோருக்கு இலகு சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகள். கிராமங்கள் தோறும் ‘குறை தீர்க்கும் குழுக்கள் அமைத்;து, மக்கள் குறைகளறிந்து, அவற்றைத் தீர்த்தல்.

 

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக, காணாமற்போன உறவுகளைக் கண்டறிவதற்காக… பரிகாரங்கள் காணப்படுவதற்காக… எமது மக்களின் சொந்த காணி, நிலங்களை விடுவிப்பதற்காக, முகாம்களிலுள்ள எமது மக்களை விரைந்து மீள்குடியேற்றம் செய்வதற்காக, யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூற பொது நினைவுதூபி அமைத்திட, அதற்கென ஒரு தினத்தை ஒதுக்குதல் இந்தியாவுடனும், தமிழகத்திடமும் உறவுகளை தொடர்ந்து பேணி எமது மக்களுக்கான உதவிகளையும், மலிவான விலையில் தரமான பொருட்களையும் நேரடியாக வடக்கிற்கு இறக்குமதி செய்வதற்காக… வன்முறையற்ற கலாசாரத்தை உருவாக்குவதற்காக புலம்பெயர் உறவுகளின் முதலீடுகளுக்காகவும் செயற்படுத்த முனைதல் உள்ளிட்ட பல அம்சங்களை தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]