ஈழத்தில் செங்குருதி தோய்ந்த துக்க நாள் இன்று – தரணியெங்கும் நினைவேந்தல் நிகழ்வுகள்

ஈழத் தமிழர் வாழ்நாளில் இன்று கறுப்பு நாள்; செங்குருதி தோய்ந்த மிகப்பெரிய துயர்படிந்த நாள்; மாபெரும் மனிதப் படுகொலை நடந்த நாள்; முள்ளிவாய்க்கால் தந்த துயர வலிகளை மனங்களில் நிறுத்திக்கொண்டு உயிர் பறித்தெடுக்கப்பட்ட தமது உறவுகளுக்காக சுடரேற்றி அஞ்சலிசெய்யும் நிகழ்வுகளில் தமிழர்கள் ஈடுபடும் நாள்.

இறுதிக்கட்டப் போரின்போது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் அரச படைகளால் கொன்று குவிக்கப்பட்ட நாளை – ஈழத்தின் மானிடப் பேரவலம் நடந்தேறிய நாளை நினைவுகூர்ந்து வருடந்தோறும் கடைப்பிடிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், தமிழகத்திலும், தமிழ் மக்கள் வசிக்கும் புலம்பெயர் தேசங்கள் எங்கும் உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளன.

2009 மே மாதத்தின் 12ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் தமிழ் மக்களின் அவலச்சாவு உச்சத்தில் இருந்தது. அத்துடன், இறுதிப்போர் மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், மே 12ஆம் திகதியிலிருந்து 18ஆம் திகதி வரையிலான வாரத்தை தமிழின அழிப்பு வாரமாக – முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமாக உலகத் தமிழர்கள் பிரகடனப்படுத்தி அதனை அனுஷ்டித்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]