இ.தொ.காவை தவிர மலையகத்தில் அரசியல் செய்ய எவருக்கும் அருகதையில்லை

இ.தொ.காவை தவிர மலையகத்தில் அரசியல் செய்ய எவருக்கும் அருகதையில்லை என்று அக்கட்சியின் இளைஞர் அணி அமைப்பாளர் பிரசாந்த ராஜமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

நல்லாட்சி அரசின் முழு உரிமையாளர்களாகவும், மலையகத்தின் தற்போதைய முழு அரசியல் அதிகாரமும் தம்மிடமே உள்ளதாகவும் சிலர் மார்தட்டிக்கொள்கின்றனர். அதுமட்டுமல்ல, பெயர்களை மாத்திரமே இவர்கள் அலங்கரித்து வருகின்றனர். இவர்கள் மலையகத்துக்காக நடைமுறைப்படுத்தியுள்ள அரசியல் திட்டங்கள் என்ன? மலையக மக்களுக்காக, மலையக இளைஞர்களுக்காக செய்தது என்ன?

மலையகத்தில் பட்டதாரிகள், உயர்தரம் கற்றோர், விளையாட்டு, கலை எனப் பல வழிகளில் திறமையுடையவர்கள் அதிகம் காணப்படுகினறனர். இவர்களுக்கான தொழில், திறமைகளுக்கான களம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளனவா? இல்லை என்பதே கசப்பான உண்மையாகும்.

மலையகத்தில் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியிலும் கல்வி, விளையாட்டு என தம் திறமைகளை வளர்த்துக்கொண்டாலும் அவர்களுக்கு எதிர்கால வாழ்க்கைக்கான தொழில் அமைவது பெரும் ஆச்சரியமாக அமைகின்றது.

அந்தவகையில் மலையகத்தில் அரசியல் செய்கின்ற தற்போதைய ஆட்சியாளர்கள் இவ்வாறனவர்களுக்கு செய்தது என்ன? நல்லாட்சி அரசின் மலையக அமைச்சர்கள் மூலம் எத்தனை பேர் தொழிகளைப் பெற்றனர்? எத்தனை பேர் வாழ்வாதார ரீதியில் முன்னேறியுள்ளனர்? இதற்கும் இல்லையென்பதே பதிலாகும்.

கடந்த கால அரசு முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சியின்போது மலையகத்தின் அதிகாரம், அமைச்சில் பதவிகளைக் கொண்டிருந்த இ.தொ.கா. மலையக மக்களுக்கு நடைமுறைப்படுத்திய சேவைகள் அளப்பரியவை. அந்தவகையில் படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, திறமைக்கேற்ப தொழில் என்று அமைத்துக் கொடுத்தது இ.தொ.காவும், அதன் பொதுச் செயலாளரும்தான்.

ஆசிரியர் நியமனம், பிரஜாசக்தி வேலைவாய்ப்புகள், தொண்டமான் தொழில்பயிற்சி நிலையத்தின் ஊடாக தொழில் பயிற்சி, உடற்பயிற்சி, சுய தொழில் ஊக்குவிப்பு என்று பல்வேறு திட்டங்கள் ஊடாக மலையக மக்களின் வாழ்வாதாரம் உயர பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

ஆனால், இன்றைய ஆட்சியாளர்கள் வெறுமனே வீட்டுத்திட்டத்தின் மூலமும் ஆங்காங்கே இடம்பெறும் கூத்துகளில் பங்கேற்பதை முகபுத்தகத்தில் பதிவேற்றுவதிலும், தம் கூட்டங்கள், நிகழ்வுகளுக்கு மக்களை சேர்ப்பதற்குமே அரசியல் செய்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]