இவ்வாரம் நாடாளுமன்றில் சிறப்பு விவாதம்

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக விவாதிக்க, சிறப்பு அமர்வு இந்தவாரம் நாடாளுமன்றத்தின் இடம்பெறவுள்ளதாக அறிய முடிகின்றது.

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பாக அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை கையளிக்கப்பட்டதை அடுத்து, அது தொடர்பான விவரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையொன்றின் ஊடாக வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து, நாடாளுமன்றத்தைக் கூட்டி இந்த அறிக்கை தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் சில கோரிக்கை விடுத்தன.

இது தொடர்பாக முடிவெடுக்க நாளை பிற்பகல் 2 மணியளவில் கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தநிலையில், நேற்று நடந்த கொழும்பில் நடந்த ஐதேகவின் 71ஆவது மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகருக்கு அழைப்பு விடுப்பதாக தெரிவித்திருந்தார்.

இதையடுத்து நாளை நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், நாடாளுமன்றத்தை இந்த வாரம் கூட்டுவது தொடர்பாக ஒருமனதாக முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, ஜனவரி 23ஆம் திகதியே நாடாளுமன்றம் கூடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.