இழப்பீடுகளுக்கான பணியக சட்டவரைவு விரைவில்

இழப்பீடுகளை வழங்குவதற்கான பணியக சட்டவரைவு விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நடந்த இலங்கை தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து பேசிய ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க இதனை கூறியுள்ளார்.

“அமைச்சரவை கடந்த 6ஆம் திகதி இழப்பீடுகளுக்கான பணியகத்தை உருவாக்குவது தொடர்பாக, அரச சட்டவரைஞர் திணைக்களத்தினால். தயாரிக்கப்பட்ட சட்டவரைவுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. உள்ளூர் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட இந்த சட்டவரைவு விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்துக்கு அமைய, நான்கு பொறிமுறைகளை அமைக்க இலங்கை அரசாங்கம் இணங்கியிருந்தது.

காணாமல் போனோர் பணியகம் அதில் ஒன்று. அது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இழப்பீடுகளுக்கான பணியகத்தை உருவாக்கும் சட்டம் விரைவில் கொண்டு வரப்படவுள்ளது.

அடுத்து, உண்மை கண்டறியும் ஆணைக்குழு, சுதந்திரமான சிறப்பு நீதிமன்றம் அமைக்கும் ஏனைய பொறிமுறைகளும் கொண்டு வரப்படும் என்றும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.