இளைய சமூகத்தினர் மத்தியில் இனவாதத்தையும் மதவாதத்தையும் வளர்த்துவிட்டு, நாடு அமைதியையும் அபிவிருத்தியையும் காண முடியாது – கலாநிதி சி. ஜெய்சங்கர்

இளைய சமூகத்தினர் மத்தியில் இனவாதத்தையும் மதவாதத்தையும் வளர்த்துவிட்டு, நாடு அமைதியையும் அபிவிருத்தியையும் காண முடியாது – கலாநிதி சி. ஜெய்சங்கர்

கலாநிதி சி. ஜெய்சங்கர்

இளைய சமூகத்தினர் மத்தியில் இனவாதத்தையும் மதவாதத்தையும் வளர்த்துவிட்டு இந்த நாடு அமைதியையும் அபிவிருத்தியையும் காண முடியாது. கலாசாரத்தை மதித்து ஒன்றுபடுவதே சாலச் சிறந்தது அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி. ஜெய்சங்கர்

இளைய சமூகத்தினர் மத்தியில் இனவாதத்தையும் மதவாதத்தையும் வளர்த்துவிட்டு இந்த நாடு அமைதியையும் அபிவிருத்தியையும் காண முடியாது. கலாசாரத்தை மதித்து ஒன்றுபடுவதே சாலச் சிறந்தது என கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி. ஜெய்சங்கர் தெரிவித்தார்.

நாடு இன மதவாதத்தால் குழப்பப்பட்டிருக்கின்ற இவ்வேளையில் கலை, கலாச்சார பண்பாட்டு விழுமியங்களுக்கூடாக இலங்கையில் ஐக்கிய சமூகங்களை கட்டி வளர்ப்பதற்கான அவசியம் குறித்து அவர் வியாழக்கிழமை 14.12.2017 கருத்து வெளியிட்டார்.

இதுபற்றித் தொடர்ந்து தெரிவித்த அவர்,

ஒரு தளத்தில் குரோதங்களை வளர்த்துக் கொண்டு மறுபுறத்தில் ஐக்கியத்தை வலியுறுத்துகின்ற அருவருப்பு நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது.

இனக் குரோதங்களை முறியடிக்கும் வகையில் இளைய சமுதாயத்தினருக்கு வழி காட்ட வேண்டும். இதுவே வன்முறைகளால் சீரழிந்து போன இந்த நாட்டைக் கட்டியெழுப்ப பெருந்துணை புரியும்.

ஒரு சமூகம் மற்ற சமூகத்தக்காக பரிந்து பேசுகின்ற சந்ததிகளை நாம் உருவாக்க வேண்டும்.

அடுத்த சமூகத்தின் உரிமைக்காகவும் சுதந்திரத்துக்காவும் குரல் கொடுக்கின்ற ஐக்கிய சமூகத்தை கடடியெழுப்புவதே சமகாலத் தேவையாகும்.

இந்த விடயத்தில் எழுத்தாளர்கள், அமைதியை விரும்பும் ஆர்வலர்கள், கலைஞர்கள், ஆசிரியர்கள், துறைசார்ந்த விற்பன்னர்கள், அதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஊடகங்களுக்கும் உயரிய பொறுப்பு இருக்கின்றது.

ஆனால் வன்முறை சார்ந்த அல்லது அமைதியையும் சமூகத்தையும் சீரழிக்கின்ற நெறி தவறிய விடயங்களுக்கு ஊடகங்களில் வழங்கப்படுகின்ற முக்கியத்துவம் சார்ந்துதான் சமூகமும் நகரத் தொடங்கி விட்டது.

இது துரதிஷ்டவசமானது. இந்த நிலைப்பாடு ஆக்கத்திற்கும் அபிவிருத்திக்கும் பதிலாக இந்த நாட்டை மேலும் அழிவுப் பாதைக்கே இட்டுச் செல்லும்.

சமூகம், சாதி, மதம் கடந்து மனிதர்கள் யாவரும் நண்பர்கள் என்ற உன்னத சிந்தனைப் போக்கில் செயற்பாடுகளை வடிவமைக்க வேண்டும்.

கிராமங்களில் இயல்பாகவே காணப்படுகின்ற அமைதியை மேலும் கட்டி வளர்ப்தற்கு ஊடகங்கள் உதவ வேண்டும்.

சுதந்திரத்தைத் தேடுகிறோம் என்ற ஆர்வக் கோளாறில் இருக்கும் அமைதியையும் இழந்து விட்டு நிற்கும் சடவாத சிந்தனையிலிருந்து மாற வேண்டும்.‪

துவேஷ சிந்தனையாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற போக்கை இல்லாமற் செய்வதற்கு இளஞ் சந்ததியினரைக் கற்பிக்க வேண்டும்.

இனம் கடந்து மதம் கடந்து சிந்திக்கின்ற அர்ப்பணிப்பு மிக்க எத்தனையோ இளம் தலைமுறை மாணவர்கள் எல்லா சமூகங்களிலும் இப்பொழுதும் இருக்கின்றார்கள். அவர்கள் மிகுந்த திறமைசாலிகளாகவும் இருக்கின்றார்கள். இவர்களை ஊக்கப்படுத்தி இந்த நாட்டின் அமைதிக்கு வழிகோலும் முன்னுதாரண புருஷர்களாக மாற்ற வேண்டும்.

இளந் தலைமுறை பல்வேறு விளக்கங்களுடனும் வியாக்கியானங்களுடனும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களது சிந்தனைகளைகளை ஒரு முகப்படுத்த வேண்டும்.

அமைதிக்கு முன்னுதாரணமாய்த் திகழ்ந்த கிராமங்கள் இப்பொழுது அரசியல் முன்னெடுப்புக்களால் அந்நியப்பட்டுப் போய் நிற்கின்றன.

அரசியல் நடாத்துவதற்காக எவ்வளவுக்குப் பிரிவினைகளைச் செய்கின்றோமோ அவ்வளவுக்கு அழிவும் காத்திருக்கிறது. ஆனாலும் நாம் தொடர்ந்தும் அழிவுகளுக்குப் பின்னும் அதையேதான் செய்து கொண்டிருக்கின்றோம்.

மக்களுக்குள் வேண்டுமென்றே பிரச்சினைக்கான விதைகள் தூவப்பட்டு அவை மதவாதிகளாலும் இனவாதிகளாலும் அரசியல்வாதிகளாலும் போஷிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன.

குழப்பியடிக்கப்பட்ட கிராமங்களை ஒன்றிணைப்பதற்கான நிகழ்ச்சித் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

சமூகங்கள் ஒன்றிணைகின்ற அம்சங்களை இல்லாமலாக்கி விட்டு ஐக்கியம் பற்றிப் பேசுவது அழிவையே தோற்றுவிக்கும். நாம் மிக வேகமாக வாய்ப்புக்களை இழந்து கொண்டிருக்கின்றோம்.” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]