இளம் விஞ்ஞானி பாராட்டி கௌரவிப்பு

இன்புலுவன்சா வைரஸ் தாக்கத்தினைக் கட்டுப்படுத்தும் புதிய வழிமுறையினை ஆராய்ச்சிமூலம் கண்டுபிடித்தமைக்காக அமெரிக்காவில் சர்வதேச விருதினைப்பெற்றுக்கொண்டுள்ள இலங்கை நாட்டின் இளம் விஞ்ஞானி ஏறாவூரைச்சேர்ந்த அல்-ஹாபிழ் டாக்டர் எம்.ஏ.சி.எம் சர்ஜுன் அவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் விசேட நிகழ்வு 23.06.2018 சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

ஏறாவூர் தாருல் உலூம் ஹாபிழ்கள் ஒன்றியம் மற்றும் உயிரோட்டமான வள நிலையம் ஆகிய அமைப்புக்கள் இணைந்து நடாத்திய இந்நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

வள நிலையத்தின் தலைவர் ஐஎல்இஸட். ஆப்தீன் தலைமையில் ஏறாவூர் – மீரா ஜும்ஆப் பள்ளிவாயலில் நடைபெற்ற இந்நிகழ்வில் நகர முதல்வர் ஐ.அப்துல் வாசித், முன்னாள் மாகாண அமைச்சர் எம்எஸ். சுபைர் மற்றும் துறைசார் அதிகாரிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகக் கடமையாற்றிய அல்-ஹாபிழ் டாக்டர் எம்.ஏ.சி.எம். சர்ஜுன் புலமைப்பரிசில் பெற்று கனடா நாட்டின் கெல்காரி பல்கலைக்கழகத்தில் உயர்தர கற்கை நெறிக்காகச் சென்று தனது குடும்ப சகிதம் கனடாவில் தங்கி வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் இவரின் கண்டுபிடிப்பு சர்வதேச ஆராய்ச்சியாளர்களின் மாநாட்டில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அமெரிக்காவின் சர்வதேச விருதினைப் பெற்றுள்ளது.

இதேவேளை இவரது மற்றுமொரு கண்டுபிடிப்பிற்காக அடுத்த மாதம் மேலுமொரு சர்வதேச விருது வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

39 வயதான டாக்டர் எம்ஏசிஎம். சர்ஜுன் பாடசாலைக்காலத்தில் ஆராய்ச்சித் துறையில் ஆர்வம் காட்டியதுடன் அறபு எழுத்தணிக்கலையில் தேசிய விருதுகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இளம் விஞ்ஞானி

ஏறாவூர் நகர சபை உறுப்பினரும் முன்னாள் மாகாண சுகாதாரஅமைச்சருமான எம்எஸ். சுபைர் இங்கு உரையாற்றுகையில்- இந்த இளம் விஞ்ஞானிக்கான விருது எமது நாட்டிற்கான கௌரவமாகக் கொள்ளப்பட்டு அனைத்து சமூக, இன , அரசியல் முக்கியஸ்தர்களும் பங்கேற்கக் கூடிய கௌரவிப்பு விழாவொன்றினை கொழும்பில் நடாத்துவதற்கு தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு ஏற்பாடு செய்யவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

பிரதியமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா இங்கு பேசுகையில்- டாக்டர் எம்ஏசிஎம். சர்ஜுன் அவசரமாக மீண்டும் கனடாவிற்குச் செல்வதனால் அவரது அடுத்த விடுமுறைக்காலத்தினைக்கருத்திற்கொ ண்டு இலவசமாக விமான டிக்கட்டினையும் பெற்றுக்கொடுத்து அவரை தாய் நாட்டிற்கு வரவழைத்து பாரிய விழாவினை கொழும்பில் நடாத்துவதற்கான ஏற்பாட்டினைச் செய்வேன் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]